“உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் அணியில் உள்ளனர்” - சர்ப்ராஸ் அகமது


“உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் அணியில் உள்ளனர்” -  சர்ப்ராஸ் அகமது
x
தினத்தந்தி 22 Sep 2018 11:00 PM GMT (Updated: 22 Sep 2018 7:36 PM GMT)

உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் அணியில் அங்கம் வகிப்பதாக பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியுள்ளனர்.

அபுதாபி,

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடந்த சூப்பர்-4 சுற்று ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் அணி 3 பந்து மீதம் வைத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 258 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தானுக்கு, ரஷித்கான், முஜீப் ரகுமான், முகமது நபி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

பரபரப்பான கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட போது, சோயிப் மாலிக் (51 ரன், நாட்-அவுட்) சிக்சர், பவுண்டரியுடன் வெற்றிகரமாக ஆட்டத்தை நிறைவு செய்தார். இமாம் உல்-ஹக் (80 ரன்), பாபர் அசாம் (66 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் நாங்கள் அதிர்ந்து போய் விட்டோம் என்றே சொல்ல வேண்டும். எல்லா பெருமையும் இமாம் உல்-ஹக், பாபர் அசாம் ஆகியோரையே சாரும். கடைசி கட்டத்தில் அற்புதமாக ஆடிய சோயிப் மாலிக்கை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர்கள், தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாக விளங்குகிறார்கள் என்று கருதுகிறேன். அவர்களுக்கு எதிராக அதுவும் இதுபோன்ற சூழலில் 258 ரன்களை விரட்டிப்பிடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கு பேட்டிங்கில் முழு திறமையை வெளிப்படுத்தியாக வேண்டும். இந்த வெற்றி எங்களுக்கு நிறைய நம்பிக்கையை தந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக எங்களது பீல்டிங்கில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த ஆட்டத்தில் மட்டும் பீல்டிங் சொதப்பி விட்டது’ என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற பாகிஸ்தான் வீரர் 36 வயதான சோயிப் மாலிக் கூறுகையில், ‘அணியின் மூத்த வீரர் என்ற முறையில் பொறுப்புடன் 50 ஓவர் வரை களத்தில் நிற்க வேண்டும் என்ற ஒரே நினைப்புடன் விளையாடினேன். ஒரு கட்டத்தில் ஓவருக்கு ஏறக்குறைய 10 ரன்கள் வீதம் தேவைப்பட்டாலும், விக்கெட்டை இழக்காமல் இறுதிவரை ஆட வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஏனெனில் பிற்பகுதியில் அதிரடி காட்ட எங்களிடம் பேட்ஸ்மேன்கள் உண்டு. ஆப்கானிஸ்தான் அணி ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் கண்டு வருகிறது. அவர்களுக்கு எனது பாராட்டுகள்’ என்றார்.

இந்த ஆட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஆப்கன், சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஆகியோருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து தலா 15 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது.

ஹசன் அலி 33-வது ஓவரின் போது, பீல்டிங் செய்த பந்தை எதிரணி பேட்ஸ்மேன் ஹஷ்மத்துல்லா ஷகிடி நோக்கி அச்சுறுத்தும் வகையில் எறிந்தார். அஸ்கார் ஆப்கன் 37-வது ஓவரில் ரன் எடுக்க ஓடுகையில், பவுலர் ஹசன் அலியின் தோள்பட்டையில் உரசினார். பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி ஆட்டம் இழந்த போது அவரை வெளியேறு என்பது போல் ரஷித்கான் சைகை காட்டினார். இது போன்ற விதிமீறல்களுக்காக மூன்று வீரர்களும் நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.


Next Story