ஆசிய கோப்பை கிரிக்கெட் ‘சூப்பர்-4’ சுற்று: ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் இந்தியா


ஆசிய கோப்பை கிரிக்கெட் ‘சூப்பர்-4’ சுற்று: ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் இந்தியா
x
தினத்தந்தி 24 Sep 2018 11:30 PM GMT (Updated: 24 Sep 2018 9:20 PM GMT)

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெறும் ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

துபாய்,

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி சூப்பர்-4 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து அடித்து நொறுக்கி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. லீக் ஆட்டத்தில் ஹாங்காங்குக்கு எதிராக மட்டும் சற்று தடுமாறிய இந்திய அணி, அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை எளிதில் பந்தாடியது. இந்த போட்டி தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.

அஸ்கார் ஆப்கன் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேச அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்தது. அனுபவம் அதிகம் இல்லாத வீரர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் அணி ‘சூப்பர்-4’ சுற்றில் பாகிஸ்தான், வங்காளதேச அணிகளிடம் போராடி தோல்வி கண்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

இந்திய அணியின் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (327 ரன்கள்), கேப்டன் ரோகித் சர்மா (269 ரன்கள்), அம்பத்தி ராயுடு (116 ரன்கள்) ஆகியோர் நன்றாக ரன் குவித்து வருகிறார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டோனி, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோருக்கு போதிய பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல் (5 விக்கெட்), குல்தீப் யாதவ் (5 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா (7 விக்கெட்), புவனேஷ்வர் குமார் (6 விக்கெட்) ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர். இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி விட்டதால் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. அவர்களுக்கு பதிலாக தீபக் சாஹர், சித்தார்த் கவுல், கலீல் அகமது ஆகியோரில் இருவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணியில் ஹஷ்மத்துல்லா ஷஹிதி, முகமது ஷாசாத், முகமது நபி, ரஷித் கான், முஜீப் ரஹ்மான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இருப்பினும் அந்த அணியினரால் நெருக்கடியை நேர்த்தியாக கையாள தெரியாமல் தவித்து வருகின்றனர்.

‘சூப்பர்-4’ சுற்றில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை சுவைக்க இந்திய அணி முனைப்பு காட்டும். அதேநேரத்தில் ஆறுதல் வெற்றியை பெற ஆப்கானிஸ்தான் அணி முயற்சி மேற்கொள்ளும். இருப்பினும் வலுவான இந்திய அணியின் சவாலை ஆப்கானிஸ்தான் அணி சமாளிப்பது என்பது கடினமான காரியமாகும்.

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

நாளை அபுதாபியில் நடைபெறும் ‘சூப்பர்-4’ சுற்று கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டு சமபுள்ளிகளுடன் இருக்கும் இந்த இரு அணிகள் இடையிலான மோதலில் வெற்றி பெறும் அணி, துபாயில் வருகிற 28-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.


Next Story