இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது? பாகிஸ்தான்-வங்காளதேசம் இன்று மோதல்


இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது? பாகிஸ்தான்-வங்காளதேசம் இன்று மோதல்
x
தினத்தந்தி 25 Sep 2018 10:00 PM GMT (Updated: 25 Sep 2018 8:40 PM GMT)

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் சூப்பர்-4 சுற்றின் கடைசி லீக்கில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் அபுதாபியில் இன்று மோதுகின்றன.

அபுதாபி, 

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் சூப்பர்-4 சுற்றின் கடைசி லீக்கில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் அபுதாபியில் இன்று மோதுகின்றன. சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி சூப்பர்-4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை போராடி வென்றது. 2-வது ஆட்டத்தில் இந்தியாவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் உதை வாங்கியது. பந்து வீச்சில் பலம் பொருந்திய அணி என்று வர்ணிக்கப்பட்ட பாகிஸ்தான் இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பேட்டிங்கில் மூத்த வீரர் சோயிப் மாலிக் மட்டுமே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி சூப்பர்-4 சுற்றில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான திரிலிங்கான ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன், இம்ருல் கேயஸ், மக்முதுல்லா உள்ளிட்டோர் பேட்டிங்கிலும், மோர்தசா, முஸ்தாபிஜூர் ரகுமான் ஆகியோர் பந்து வீச்சிலும் வங்காளதேசத்திற்கு நம்பிக்கை அளிக்கின்றனர். பாகிஸ்தானுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறார்கள்.

இவ்விரு அணிகளும் இதுவரை 35 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 31-ல் பாகிஸ்தானும், 4-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story