கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: ‘‘இந்தியாவுடன் ‘டை’ செய்ததே வெற்றி போன்றது தான்’’ ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் சொல்கிறார் + "||" + Asian Cup Cricket: "Dye 'with India is like a victory"

ஆசிய கோப்பை கிரிக்கெட்: ‘‘இந்தியாவுடன் ‘டை’ செய்ததே வெற்றி போன்றது தான்’’ ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் சொல்கிறார்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: ‘‘இந்தியாவுடன் ‘டை’ செய்ததே வெற்றி போன்றது தான்’’ ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் சொல்கிறார்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுடன் ‘டை’ செய்ததே வெற்றி போன்றது தான் என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஆப்கன் கூறினார்.

துபாய், 

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுடன் ‘டை’ செய்ததே வெற்றி போன்றது தான் என்று ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஆப்கன் கூறினார்.

‘டை’யில் முடிந்த ஆட்டம்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு துபாயில் நடந்த சூப்பர்–4 சுற்றில் நடப்பு சாம்பியன் இந்தியா– ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஷாசாத்தின் சதத்தின் (124 ரன், 11 பவுண்டரி, 7 சிக்சர்) உதவியுடன் 8 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் போலவே பயணித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடுவும் (57 ரன்), லோகேஷ் ராகுலும் (60 ரன்) அரைசதம் அடித்து வெளியேறினர். மிடில் வரிசையில் தினேஷ் கார்த்திக் (44 ரன்) தவிர மற்றவர்கள் சொதப்பினர். ஆப்கானிஸ்தான் அணி, ரஷித்கான், முஜீப் ரகுமான், முகமது நபி ஆகியோருடன் மேலும் இரண்டு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்களையும் பயன்படுத்தி மிரள வைத்தது.

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 7 தேவைப்பட்ட போது, கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. இறுதி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் வீசினார். இதில் முதல் 4 பந்தில் இந்தியா பவுண்டரி உள்பட 6 ரன்களை எடுத்தது. 5–வது பந்தை சந்தித்த ரவீந்திர ஜடேஜா (25 ரன்) தூக்கியடித்து கேட்ச் ஆனார். இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆக, பரபரப்பான இந்த ஆட்டம் சமனில் (டை) முடிந்தது. இந்திய அணி பங்கேற்ற ஆட்டம் ஒன்று ‘டை’ ஆவது இது 8–வது நிகழ்வாகும். இதே போல் அதிக ‘டை’ ஆன ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்தவராக டோனி (5 ஆட்டம்) திகழ்கிறார்.

டோனி கருத்து

பின்னர் இந்திய பொறுப்பு கேப்டன் டோனி கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட்டில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் இந்த மாதிரி விளையாடி வருவது பாராட்டுக்குரியது. அவர்களின் ஆட்டத்தை நாங்கள் உற்சாகமாக ரசித்தோம். இந்த ஆட்டத்தில் பிற்பகுதியில் ஆடுகளத்தன்மை மேலும் மெதுவான தன்மை கொண்டதாக மாறியது. பேட்டிங், பந்து வீச்சு மட்டுமின்றி அவர்கள் பீல்டிங்கிலும் பிரமாதப்படுத்தி விட்டனர்.

இரண்டு ரன்–அவுட் மற்றும் மேலும் சில வி‌ஷயங்கள் (நடுவரின் தவறான எல்.பி.டபிள்யூ.) பாதகமாக அமைந்ததால், இந்த ஆட்டத்தில் நாங்கள் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டிருக்கலாம். அதில் இருந்து தப்பித்து இந்த முடிவு கிடைத்தது மகிழ்ச்சியே. பேட்ஸ்மேன்கள் ஷாட்டுகளை தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார். டோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு நடுவர் தவறான எல்.பி.டபிள்யூ. வழங்கினார். இது குறித்து டோனியிடம் கேட்ட போது, ‘நடுவரின் தீர்ப்பை விமர்சித்து அபராதத்தை சந்திக்க விரும்பவில்லை’ என்று பதில் அளித்தார்.

வெற்றி போன்றது

ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஆப்கன் கூறுகையில், ‘சுழற்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளமாக இருந்ததால் எங்களுக்கு நன்கு கைகொடுத்தது. முகமது ஷாசாத்தின் பேட்டிங் அருமையாக இருந்தது. அவருக்கு பாராட்டுகள். சுழற்பந்து வீச்சாளர்களும் தங்கள் பணியை சரியாக செய்தனர். இந்தியா போன்ற பலம் வாய்ந்த அணியுடன் ‘டை’ செய்ததை வெற்றி போன்றே உணர்கிறேன். முந்தைய இரு ஆட்டங்களில் இந்திய வீரர்கள் எளிதில் ‘சேசிங்’ செய்தனர். ஆனால் நாங்கள் அவர்களுக்கு கடும் சவால் கொடுத்தோம். இது போன்ற ஆட்டங்கள் தான் ரசிகர்களுக்கு விருந்து படைக்கக்கூடியவை’ என்றார்.

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட முகமது ஷாசாத் கூறுகையில், ‘6 மணி நேரத்திற்கு மேலாக களத்தில் போராடி இருக்கிறோம். ஆனால் கடைசியில் முடிவு கிடைக்கவில்லை என்கிற போது திருப்தி அளிக்கவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் எனது செயல்பாடு மகிழ்ச்சியாக உள்ளது. நாளை தாயகம் திரும்ப இருப்பதால், சுதந்திரமாக ஆட வேண்டும், ஒவ்வொரு பந்தையும் அடித்து நொறுக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஆடினேன். ஆசியாவின் சிறந்த அணிக்கு எதிராக நான் விளையாடிய விதத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்’ என்றார்.

ராகுல் சொல்வது என்ன?

இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் கூறுகையில், ‘டி.ஆர்.எஸ். முறைப்படி ஒரு முறை மட்டுமே அப்பீல் செய்ய முடியும் என்பது இக்கட்டான ஒன்று தான். ஆட்டத்தை திரும்பி பார்க்கும் போது, நான் டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்தி இருக்கக்கூடாது என்று நினைக்கத் தோன்றுகிறது. பந்து ஸ்டம்பை விட்டு விலகி செல்லலாம் என்று கருதி தான் டி.ஆர்.எஸ். கேட்டேன். அது தவறாக போய் விட்டது. டி.ஆர்.எஸ். வி‌ஷயத்தில் நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்.

இது போன்ற வேகமில்லாத ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கிய உடனே பவுண்டரிகள் அடிப்பது கடினமானதாகும். ஆப்கானிஸ்தான் பவுலர்களும் கடுமையான நெருக்கடி தந்தனர். இந்த ஆட்டத்தின் முடிவு நீண்ட காலம் மனதில் நிலைத்து நிற்கும்’ என்றார்.

குல்தீப் மீது கோபப்பட்ட டோனி

இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், பொறுப்பு கேப்டன் டோனியின் கோபத்திற்கு ஆளானார். குறிப்பிட்ட ஓவரை பந்து வீசுவதற்கு தயாரான குல்தீப் யாதவ், பீல்டிங்கை மாற்றும்படி கூறிக்கொண்டே இருந்தார். இதனால் எரிச்சலடைந்த டோனி, ‘இப்போது நீ பந்து வீசுகிறாயா அல்லது உன்னை மாற்றி விட்டு வேறு பவுலரை அழைக்கவா?’ என்று உரக்க கத்தினார். இதையடுத்து உடனடியாக குல்தீப் யாதவ் பந்து வீசினார். எப்போதும் அமைதியை கடைபிடிக்கும் டோனி, சக வீரரிடம் கோபத்தை காட்டியதை கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இந்த உரையாடல் ஸ்டம்பில் உள்ள மைக்கில் பதிவாகியுள்ளது. இது சமுக வலைதளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.


ஆசிரியரின் தேர்வுகள்...