வங்காளதேசத்திடம் வீழ்ந்தது: ‘மோசமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம்’ பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது சொல்கிறார்


வங்காளதேசத்திடம் வீழ்ந்தது: ‘மோசமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம்’ பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது சொல்கிறார்
x
தினத்தந்தி 27 Sep 2018 10:00 PM GMT (Updated: 27 Sep 2018 8:39 PM GMT)

‘ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே காரணம்’ என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியுள்ளார்.

அபுதாபி, 

‘ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தோல்விக்கு மோசமான பேட்டிங்கே காரணம்’ என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியுள்ளார்.

வங்காளதேசத்திடம் வீழ்ந்தது

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடந்த சூப்பர்–4 சுற்றின் கடைசி லீக்கில் வங்காளதேச அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்து 3–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 48.5 ஓவர்களில் 239 ரன்கள் எடுத்து ஆல்–அவுட் ஆனது. முஷ்பிகுர் ரஹிம் (99 ரன்), முகமத் மிதுன் (60) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்து முடங்கியது. அதிகபட்சமாக இமாம் உல்–ஹக் 83 ரன்கள் எடுத்தார். சூப்பர்–4 சுற்றில் 2–வது தோல்வியை தழுவிய பாகிஸ்தான் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து மூட்டையை கட்டியது.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி இதுவரை 36 ஆட்டங்களில் மோதியுள்ளது. இதில் முதல் 32 ஆட்டங்களை எடுத்துக் கொண்டால், அதில் 31–ல் பாகிஸ்தான் வெற்றி கண்டிருந்தது. ஆனால் கடைசியாக இவ்விரு அணிகளும் சந்தித்த 4 ஆட்டங்களிலும் வங்காளதேசம் வெற்றியை வசப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்ப்ராஸ் கருத்து

தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ‘தோல்வியால் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். இந்த தொடரில் எங்களது தோல்விக்கு மோசமான பேட்டிங்கே முக்கிய காரணமாகும். ஒரு அணியாக நாங்கள் எந்த துறையிலும் ஜொலிக்கவில்லை. எங்களது செயல்பாடு மிக மோசமாக இருந்தது. அதே போல் ஒரு வீரராக நானும் சரியாக ஆடவில்லை. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் ரன்கள் குவித்து இருக்க வேண்டும்.

சிறந்த அணிகளை தோற்கடிக்க வேண்டும் என்றால் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். நிறைய பேட்டிங் சீர்குலைவு தொடரில் எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. தொடக்க ஆட்டக்காரர் பஹார் ஜமான் (5 ஆட்டத்தில் 56 ரன்) எங்களது பிரதான பேட்ஸ்மேன். அவரும் இந்த முறை சோடை போய் விட்டார்’ என்றார்.

கேப்டனுக்கு நெருக்கடி

மேலும் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ‘தனிப்பட்ட முறையில் சரியாக விளையாடாமல் அணியும் தோற்கும் பட்சத்தில் எந்த ஒரு கேப்டனுக்கும் நெருக்கடி ஏற்படத்தான் செய்யும். அதுவும் பாகிஸ்தான் கேப்டனாக இருப்பது எப்போதும் நெருக்கடி தான். சொன்னால் நம்ப மாட்டீர்கள். கடந்த 6 இரவுகள் எனக்கு தூக்கமே கிடையாது. இதுவும் விளையாட்டில் ஒரு அங்கம் தான்.

அணியில் ஒன்று, இரண்டு மாற்றம் செய்ய தேர்வாளர்கள் விரும்பினால் பரவாயில்லை. ஆனால் இந்த அணி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக பயப்பட வேண்டிய தேவையில்லை. தோல்வி அடைந்து விட்டோம். ஆனால் அணிக்குள் அதிரடியாக மாற்றங்கள் செய்வதற்குரிய நேரம் இது கிடையாது’ என்றார்.

31 வயதான சர்ப்ராஸ் அகமது இந்த தொடரில் 5 ஆட்டங்களில் வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story