ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்? இந்தியா–வங்காளதேசம் இறுதிப்போட்டியில் இன்று மோதல்


ஆசிய கோப்பையை வெல்லப்போவது யார்? இந்தியா–வங்காளதேசம் இறுதிப்போட்டியில் இன்று மோதல்
x
தினத்தந்தி 27 Sep 2018 11:00 PM GMT (Updated: 27 Sep 2018 8:46 PM GMT)

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்திற்காக இந்தியா–வங்காளதேச அணிகள் இன்று கோதாவில் இறங்குகின்றன.

துபாய், 

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்திற்காக இந்தியா–வங்காளதேச அணிகள் இன்று கோதாவில் இறங்குகின்றன.

ஆசிய கோப்பை கிரிக்கெட்

14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15–ந்தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்–4 சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, பாகிஸ்தான் உள்பட 4 அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவும், வங்காளதேசமும் துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன.

இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இந்தியா தான். ஆனால் பெரிய அணிகளுக்கு எதிராக அமர்க்களப்படுத்திய இந்தியா, குட்டி அணிகளுக்கு எதிராக தகிடுதத்தம் போட்டது. ஹாங்காங்குக்கு எதிரான லீக்கில் பெரும் போராட்டத்திற்கு பிறகே வெற்றி கிடைத்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியில் இருந்து தப்பித்து சமன் (டை) செய்ததே பெரிய வி‌ஷயமாகும். அதே சமயம் பாகிஸ்தானை இரண்டு முறையும், வங்காளதேசத்தை ஒரு முறையும் குறைந்த ரன்களில் சுருட்டி புரட்டியெடுத்தது.

நம்பிக்கை தரும் தொடக்க ஜோடி

தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 269 ரன்), துணை கேப்டன் ஷிகர் தவானும் (2 சதம் உள்பட 327 ரன்) தான் இந்தியாவின் பேட்டிங் தூண்கள் ஆவர். அவர்கள் விளையாடிய 4 ஆட்டங்களிலும் பிரமாதமான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்து வெற்றிக்கு வழிவகுத்தனர். அதே போல் முக்கியமான இந்த ஆட்டத்திலும் அவர்கள் பதற்றமின்றி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் நன்றாக ஆடுகிறார்கள். மிடில் வரிசையில் விக்கெட் கீப்பர் டோனி, கேதர் ஜாதவின் தடுமாற்றம் பலவீனமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் 2–வது பேட்டிங்கில் 240 ரன்களை ‘சேசிங்’ செய்வது கூட கடினமாகி விடும். இவர்கள் பார்முக்கு திரும்பினால் அணி மேலும் வலுவடையும்.

வேகம் குறைந்த இங்குள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். இதே போல் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ராவும், புவனேஷ்வர்குமாரும் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

வரலாறு படைக்கும் முனைப்பில் வங்காளதேசம்

மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணியில் காயம் காரணமாக தமிம் இக்பால், ‌ஷகிப் அல்–ஹசன் ஆகிய முன்னணி வீரர்கள் விலகி விட்டனர். முஷ்பிகுர் ரஹிம் (ஒரு சதம் உள்பட 297 ரன்), முகமத் மிதுன், மக்முதுல்லா ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று ஆடினால், நிச்சயம் இது சவாலான போட்டியாக அமையும்.

சர்வதேச கிரிக்கெட்டில் வங்காளதேச அணி இதுவரை 8 ‘நாக்–அவுட்’ சுற்றில் விளையாடி இருக்கிறது. அவை அனைத்திலும் தோல்வியே மிஞ்சியது. இதில் இந்தியாவுக்கு எதிராக 4 ஆட்டங்களும் அடங்கும். எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அது வங்காளதேசத்துக்கு வரலாற்று சாதனையாக பதிவாகும்.

ஆசிய கிரிக்கெட்டில் இரண்டு முறை இறுதி ஆட்டத்தில் கோட்டைவிட்ட வங்காளதேசம் இந்த முறை கூடுதல் உத்வேகத்துடன் களத்தில் வரிந்து கட்டும். ஏற்கனவே சூப்பர்–4 சுற்றில் இந்தியாவிடம் அடைந்த படுதோல்விக்கும் பழிதீர்க்க தீவிரம் காட்டுவதால், இன்றைய மோதலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

வங்காளதேசத்துடன் ஒப்பிடும் போது இந்தியாவின் கையே ஓங்கி நிற்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்திய வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். ஒருங்கிணைந்த முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்தியாவின் கையில் 7–வது முறையாக ஆசிய கோப்பை தவழ்வதை யாராலும் தடுக்க முடியாது.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், பும்ரா.

வங்காளதேசம்: லிட்டான் தாஸ், சவும்யா சர்கார், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், முகமத் மிதுன், இம்ருல் கேயஸ், மக்முதுல்லா, மெஹிதி ஹசன், மோர்தசா (கேப்டன்), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான்.

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story