கிரிக்கெட்

வங்காளதேசத்தை கடைசி பந்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன்: ‘‘ஆசிய கோப்பை, கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு’’ கேப்டன் ரோகித் சர்மா பேட்டி + "||" + Falling to the last ball of Bangladesh India Champion

வங்காளதேசத்தை கடைசி பந்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன்: ‘‘ஆசிய கோப்பை, கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு’’ கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

வங்காளதேசத்தை கடைசி பந்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன்: ‘‘ஆசிய கோப்பை, கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு’’ கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி கடைசி பந்து வரை போராடி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று கேப்டன் ரோகித் சர்மா பெருமிதத்துடன்

துபாய், 

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி கடைசி பந்து வரை போராடி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று கேப்டன் ரோகித் சர்மா பெருமிதத்துடன் கூறினார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட்

14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று முன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 48.3 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டான் தாஸ் 121 ரன்கள் விளாசினார். ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த வங்காளதேச அணி, இந்திய சுழலில் சிக்கி பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் அடங்கிப்போனது.

பின்னர் ஆடிய இந்திய அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. கேப்டன் ரோகித் சர்மா (48 ரன்), தினேஷ் கார்த்திக் (37 ரன்), டோனி (36 ரன்), ரவீந்திர ஜடேஜா (23 ரன்), புவனேஷ்வர்குமார் (21 ரன்) ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தனர். மிடில் வரிசையின் மந்தமான பேட்டிங்கும், எதிரணியின் வேகப்பந்து தாக்குதல் மற்றும் பீல்டிங் நெருக்குதலும் இறுக்கமான சூழலை உருவாக்கியது.

கடைசி பந்தில் முடிவு

இறுதி கட்டத்தில் டென்‌ஷன் தொற்றிக்கொண்டதோடு, வெற்றிக்கனி யாருக்கு என்பது மதில் மீது பூனையாக தெரிந்தது. வலது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் பாதியில் வெளியேறிய ஆல்–ரவுண்டர் கேதர்ஜாதவ், அணியை காப்பாற்றுவதற்காக வலி நிவாரணி மருந்து போட்டுக்கொண்டு மறுபடியும் களம் இறங்கினார். கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. வங்காளதேச அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்களும் 10 ஓவர்களை வீசி விட்டதால் வேறு வழியின்றி கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மக்முதுல்லா போட்டார். இதில் இந்திய வீரர்கள் முதல் 5 பந்தில் 5 ரன் எடுத்தனர். அதைத் தொடர்ந்து கடைசி பந்தில் கேதர் ஜாதவ் ஒரு ரன் எடுத்து பரபரப்பான ஆட்டத்தை சுபமாக முடித்து வைத்தார்.

இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 223 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியோடு மகுடம் சூடியது. கேதர் ஜாதவ் (23 ரன்), குல்தீப் யாதவ் (5 ரன்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

ரூ.72 லட்சம் பரிசு

இந்திய அணி ஆசிய கோப்பையை வசப்படுத்துவது இது 7–வது முறையாகும். இந்த கோப்பையை அதிகமுறை வென்ற அணியும் இந்தியா தான். இலங்கை அணி 5 முறை வென்று இருக்கிறது.

சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு கோப்பையுடன் ரூ.72 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2–வது இடத்தை பிடித்த வங்காளதேசத்துக்கு ரூ.36 லட்சம் கிடைத்தது. இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் (2 சதம் உள்பட 342 ரன்) தொடரின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு ரூ.10 லட்சத்தை பரிசாக பெற்றார். ஆட்டநாயகன் விருது வங்காளதேச வீரர் லிட்டான் தாசுக்கு வழங்கப்பட்டது.

ரோகித் சர்மா சொல்வது என்ன?

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:–

‘இந்த தொடர் முழுவதும் நாங்கள் மெச்சத்தகுந்த சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு இதுவாகும். இந்த தொடரில் தொடக்க ஆட்டம் முதல் இறுதிவரை ஆதிக்கம் செலுத்தியதற்கு நிறைவான வெகுமதி கிடைத்திருக்கிறது. இது போன்று கடைசி ஓவர் வரை நீடித்த ஆட்டங்களில் பங்கெடுத்த அனுபவம் எனக்கு ஏற்கனவே உண்டு. மிடில் வரிசையில் நமது வீரர்கள் நெருக்கடியை திறம்பட கையாண்டனர். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க எடுத்த முயற்சிகள் அற்புதமானவை. இதே போல் வங்காளதேச அணியையும் பாராட்டியாக வேண்டும். முதல் 10 ஓவர்களில் வேகமாக ரன்கள் திரட்டி அழுத்தம் கொடுத்தனர். ஆனால் பந்து பழசானால், சுழற்பந்து வீச்சுக்கு உதவிகரமாக இருக்கும், ஆட்டமும் நமது பக்கம் திரும்பிவிடும் என்று காத்திருந்தோம். அது போலவே நடந்தது.

பெருமிதம் கொள்கிறேன்

நமது சுழற்பந்து வீச்சாளர்கள் கடந்த 6–8 மாதங்களாக தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இது அணிக்கு அனுகூலமான வி‌ஷயமாகும். இங்குள்ள சீதோஷ்ண நிலையும், ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் சூழ்நிலைக்கு தகுந்தபடி வேகப்பந்து வீச்சாளர்களும் அருமையாக பந்து வீசினர். இதே போல் ரவீந்திர ஜடேஜா, முன்பை விட தற்போது மேம்பட்டு இருப்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். அவரது பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் திறமை அணிக்கு முக்கியமானதாகும்.

இது போன்ற அணி அமையும் போது கேப்டன் எப்போதும் உற்சாகமாகத்தான் இருப்பார். ஆனால் எஞ்சிய 10 வீரர்களின் ஆதரவு இல்லாமல் வெற்றி கிடைப்பது எளிதல்ல. கூட்டுமுயற்சியால் சாதித்து இருக்கிறோம். வீரர்களை நினைத்து நான் உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறேன். அதே போல் இந்த ஆசிய போட்டி முழுவதும் அதிக எண்ணிக்கையில் நேரில் வந்து உற்சாகப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் அவர்கள் மகிழ்ச்சியோடு திரும்பியிருப்பார்கள்’ என்றார்.

மோர்தசா கருத்து

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 3–வது முறையாக இறுதி சுற்று வரை வந்து கோட்டை விட்டது குறித்து வங்காளதேச கேப்டன் மோர்தசா கூறியதாவது:–

‘மனம் தளராமல் கடைசி பந்து வரை போராடினோம். தோல்வி அடைந்தாலும் நாங்கள் நிறைய இதயங்களை வென்று விட்டோம் என்று நம்புகிறேன்.பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பல தவறுகளை செய்து விட்டோம். இந்த தொடரில் எங்களது பவுலர்கள் தங்களது பணியை மிகச்சிறப்பாக செய்துள்ளனர். 240–க்கு மேல் ரன்கள் எடுத்த ஆட்டங்களில் எல்லாம் வெற்றி பெற்றோம். அதனால் குறைந்தது 260 ரன்களாவது எடுக்க வேண்டும் என்று எங்களது பேட்ஸ்மேன்களிடம் கூறினேன். ஆனால் இந்திய பவுலர்கள் பிற்பகுதியில் எங்களை வெகுவாக கட்டுப்படுத்தி விட்டனர்.

முந்தைய 3–4 ஆட்டங்களை பார்த்தால் தொடக்கத்தில் விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்தாலும் அதன் பிறகு சமாளித்து 240 முதல் 250 ரன்கள் வரை எடுத்திருந்தோம். ஆனால் இந்த ஆட்டத்தில் நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தவறிப்போனோம்.

இந்திய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் ரன் எடுத்துக் கொண்டிருந்ததால், 49–வது ஓவருக்கு வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை பயன்படுத்த வேண்டியதாயிற்று. ஏனெனில் அந்த சமயத்தில் சுழற்பந்து வீச்சை கொண்டு வர முடியாது. இந்த நிலையை எட்டியது நினைத்து ஒவ்வொரு வீரர்களும் பெருமைப்பட வேண்டும். அதே சமயம் இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மோர்தசா கூறினார்.

சுவாரஸ்யமான சாதனை துளிகள்

*ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு அணி கடைசி பந்தில் வெற்றியை சுவைப்பது இது 36–வது நிகழ்வாகும். ஆனால் இந்திய அணிக்கு இதுவே முதல் அனுபவமாகும்.

*சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 9 முறை ‘நாக்–அவுட்’ சுற்று ஆட்டங்களில் விளையாடி இருக்கும் வங்காளதேச அணிக்கு அனைத்திலும் சோகமான முடிவுகளே கிடைத்திருக்கிறது. இதில் இந்தியாவுக்கு எதிரான 5 தோல்விகளும் அடங்கும்.

*ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளை சேர்த்து) இந்தியா பதிவு செய்த 700–வது வெற்றி இதுவாகும். இந்த சாதனை பட்டியலில் ஆஸ்திரேலியா (995 வெற்றி), இங்கிலாந்து (767) ஆகிய அணிகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

*ரோகித் சர்மா இதுவரை கேப்டனாக பணியாற்றியுள்ள 4 தொடர்களிலும் வெற்றி பெற்று இருக்கிறார். ராகுல் டிராவிட்டுக்கு பிறகு கேப்டனாக இருந்த முதல் 4 தொடர்களிலும் கோப்பையை வசப்படுத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆவார்.

*எந்த ஒரு பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்காமல் இந்திய அணி விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச இலக்கு (223 ரன்) இது தான்.

*2016–ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை போல் இந்த முறையும் இந்திய அணி தோல்வியையே சந்திக்காமல் வாகை சூடியிருக்கிறது.

வங்காளதேச ரசிகர்கள் ஆவேசம்

இந்த ஆட்டத்தில் வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் லிட்டான் தாஸ் 121 ரன்களில், விக்கெட் கீப்பர் டோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஆனால் இந்த தீர்ப்பு சர்ச்சையை கிளப்பியது. 3–வது நடுவர் ரோட் டக்கர் (ஆஸ்திரேலியா) வீடியோ காட்சிகளை பலவாறு ஆராய்ந்த போது, ஒரு கோணத்தில் லிட்டான் தாசின் கால் கோட்டுக்குள் இருப்பது போல் தெரிந்தது. இதை திரையில் பார்த்த வர்ணனையாளர் ரமிஸ்ராஜா இது அவுட் இல்லை என்று கூறினார். ஆனால் நடுவரோ அவுட் என தீர்ப்பு வழங்கினார். பொதுவாக கிரிக்கெட்டில் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு சாதகமாகத் தான் வழங்க வேண்டும். இதனால் கோபமடைந்துள்ள வங்காளதேச ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

‘இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போதெல்லாம் விதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பின்னால் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் இயக்குகிறது, லிட்டான் தாசின் கால் கோட்டுக்குள் தான் இருக்கிறது. ஆனால் நடுவர் அவுட் கொடுத்திருக்காவிட்டால் அதுவே அந்த நடுவரின் கடைசி போட்டியாக இருந்திருக்கும்.’ என்று வங்காளதேச ரசிகர்கள் கோபத்தை கொட்டியுள்ளனர். மேலும் ஐ.சி.சி.யையும், இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் கடுமையான வார்த்தைகளால் வசைப்பாடியிருக்கிறார்கள்.