தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம்


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம்
x
தினத்தந்தி 1 Oct 2018 10:45 PM GMT (Updated: 1 Oct 2018 8:55 PM GMT)

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, மத்திய சட்ட ஆணையத்தின் அறிக்கை, விளையாட்டு அமைச்சகத்தின் மத்திய பொது தகவல் அதிகாரியின் அறிக்கை, கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு ஆகியவற்றை அலசி ஆராய்ந்ததில் பி.சி.சி.ஐ அமைப்பை, ஆர்.டி.ஐ. வரம்புக்குள் கொண்டு வர முகாந்திரம் இருப்பதால் மத்திய தகவல் ஆணையம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இனி கிரிக்கெட் வாரியம் சம்பந்தப்பட்ட பொதுமக்களின் கேள்விகளுக்கு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பதில் அளிக்க வேண்டும். இது தொடர்பாக ஆன்-லைன் மற்றும் இதர வகையில் மனுக்களை பெறுவதற்குரிய வழிமுறைகளை 15 நாட்களுக்குள் செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்திற்கு மத்திய தகவல் ஆணைய கமிஷனர் ஸ்ரீதர் ஆச்சார்யலு உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னாட்சி அமைப்பு, மத்திய அரசிடம் இருந்து எந்த நிதி உதவியும் பெறுவதில்லை, அதனால் ஆர்.டி.ஐ.-ன் கீழ் கட்டுப்பட முடியாது என்று வாதிட்ட கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. பி.சி.சி.ஐ.யின் நிதி நிலைமை, செலவினங்கள், அணித் தேர்வு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியுலகுக்கு இனி அவ்வப்போது தெரிய வரும்.


Next Story