டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? - கருண்நாயரிடம் தேர்வு குழு தலைவர் விளக்கம்


டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? - கருண்நாயரிடம் தேர்வு குழு தலைவர் விளக்கம்
x
தினத்தந்தி 1 Oct 2018 11:00 PM GMT (Updated: 1 Oct 2018 9:05 PM GMT)

இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து கருண் நாயருக்கு தேர்வு குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கர்நாடகாவைச் சேர்ந்த கருண் நாயர், கடந்த 2016-ம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 303 ரன்கள் குவித்தார். டெஸ்டில் முச்சதம் அடித்த இரண்டு இந்தியர்களில் அவரும் ஒருவர். அதன் பிறகு சில போட்டிகளில் சோபிக்காததால் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். சமீபத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயரும் அங்கம் வகித்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படவில்லை.

இதனால் வேதனை அடைந்த 26 வயதான கருண் நாயர், ‘எனக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து தேர்வு குழுவோ அல்லது இந்திய அணி நிர்வாகமோ யாரும் என்னிடம் தொடர்பு கொண்டு விவாதிக்கவில்லை’ என்று கூறியிருந்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து இந்திய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் கேள்வி எழுப்பிய போது அவர் நேற்று கூறியதாவது:-

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பிறகு கருண் நாயரை நான் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு, அணித் தேர்வு குறித்து விரிவாக விளக்கம் அளித்தேன். மறுபடியும் அணிக்குள் நுழைவதற்கான வழிமுறைகளை எடுத்து சொன்னேன். வீரர்கள் உடனான தகவல் தொடர்பு விஷயத்தை பொறுத்தவரை தேர்வு கமிட்டிக்கு என்று வகுக்கப்பட்ட நடைமுறையில் தெளிவாக இருக்கிறோம். தகவல் தொடர்பு எப்போதும் தேர்வு கமிட்டிக்கு முக்கியமானது. ஆனால் எந்த ஒரு வீரருக்கும் நீங்கள் அணியில் இல்லை என்ற மகிழ்ச்சியற்ற தகவலை சொல்வது கடினமானதாகும். அவ்வாறான சூழலில் நீங்கள் அணிக்கு ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கு உரிய காரணத்தை சொல்ல வேண்டியது அவசியமாகும். ஆனாலும் அவர்கள் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமலும் போகலாம்.

எங்களது தேர்வாளர்களில் ஒருவரான தேவங் காந்தி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது கருண் நாயரிடம் ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தொடர்பாக நீண்ட நேரம் பேசினார். அது மட்டுமின்றி அவருக்கு ஊக்கமளித்து வாய்ப்புக்காக காத்திருக்கும்படி ஆலோசனைகளும் வழங்கினார். இந்திய அணிக்கு திரும்புவதற்கு கருண்நாயர், ரஞ்சி மற்றும் இந்திய ஏ அணி போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் குவிக்க வேண்டும். நமது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்திட்டத்தில் கருண் நாயருக்கும் நிச்சயம் இடம் உண்டு. தற்போது அவர் முதல்தர போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று எம்.எஸ்.கே.பிரசாத் கூறினார்.


Next Story