கிரிக்கெட்

“ஷேவாக்கை நடுங்க வைத்த பவுலர்” - அவரே வெளியிட்ட ருசிகர தகவல் + "||" + "The bowler who shook Shewag" - The information he released

“ஷேவாக்கை நடுங்க வைத்த பவுலர்” - அவரே வெளியிட்ட ருசிகர தகவல்

“ஷேவாக்கை நடுங்க வைத்த பவுலர்” - அவரே வெளியிட்ட ருசிகர தகவல்
இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், தன்னை நடுங்க வைத்த ஒரே பவுலர் சோயிப் அக்தர் தான் என்று கூறியிருக்கிறார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக். களம் இறங்கி நிலைத்து நின்று விட்டால் எதிரணி பவுலர்களை பஞ்சராக்கி விடுவார். அபாயகரமான பேட்ஸ்மேன் என்று வர்ணிக்கப்பட்ட ஷேவாக் டெஸ்டில் இரண்டு முறை முச்சதம் அடித்து இருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 15 சதம் உள்பட 8,273 ரன்கள் எடுத்ததோடு, 104.33 ஸ்டிரைக் ரேட் வைத்திருந்தார்.


அவரும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடியும் இணைதள நிகழ்ச்சி ஒன்றில் கலந்துரையாடினர். அப்போது ஷேவாக்கிடம், கிரிக்கெட்டில் உங்களை அச்சுறுத்திய பவுலர் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஷேவாக், ‘நான் பயந்த ஒரே பவுலர் யார் என்றால் அது பாகிஸ்தானின் அதிவேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தரை கண்டு தான். அவர் எந்த பந்தில் காலை பதம் பார்ப்பார், எந்த பந்தில் தலையை குறிவைப்பார் என்பது உங்களுக்கு தெரியாது. அவர் வீசிய நிறைய பவுன்சர்கள் எனது ஹெல்மெட்டில் தாக்கியுள்ளன. அவரை கண்டு நான் பயந்தேன். அதே சமயம் அவரது பந்துகளை அடித்தும் மகிழ்ந்துள்ளேன்’ என்றார்.

இந்த கேள்வியை அப்ரிடியிடம் முன்வைத்த போது, ‘நான் எந்த பந்து வீச்சாளரையும் கண்டு அஞ்சியதில்லை. ஆனால் ஒரே ஒரு பேட்ஸ்மேனுக்கு பந்து வீசுவது மட்டும் கடினமாக இருக்கும். அந்த பேட்ஸ்மேன் ஷேவாக் தான்’ என்றார்.

பிடித்தமான எதிரணி என்று கேள்விக்கு பதில் அளித்த ஷேவாக், ‘என்னை கவர்ந்த எதிரணி எப்போதும் பாகிஸ்தான் தான். 1999-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனேன். அந்த ஆட்டத்தில் என்னை பாகிஸ்தான் வீரர்கள் அதிகமாக திட்டி தீர்த்தனர். இத்தனைக்கும் 2 பந்து மட்டுமே நின்றேன். அக்தரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்ந்தேன். எனது 20 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை அவர்களை போல் யாரும் வசைபாடியதில்லை.’ என்றார்.

மறக்க முடியாத தருணம் எது என்று ஷேவாக்கிடம் கேட்ட போது, ‘2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையையும் வென்றதை சொல்வேன். தென்ஆப்பிரிக்காவில் 2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் நாங்கள் இளம் வீரர்களை கொண்ட அணியாக பங்கேற்றோம். இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் சாதித்து காட்டினோம். இதே போல் 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி சொந்த மண்ணில் நடந்தது. சொந்த மண்ணில் இதற்கு முன்பு யாரும் உலககோப்பையை வென்றதில்லை என்ற நிலைமையை மாற்றி காட்டியது மறக்க முடியாது’ என்றார்.

அப்ரிடி கூறுகையில், ‘2009-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை வெற்றி மறக்க முடியாத நினைவாகும். ஏனெனில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் காரணமாக எங்கள் நாட்டில் கிரிக்கெட் தள்ளாடிக் கொண்டிருந்த சமயம் அது. அந்த வெற்றி எங்கள் நாட்டில் மீண்டும் கிரிக்கெட் எழுச்சி பெறுவதற்கு முக்கியமானதாக இருந்தது’ என்றார்.


ஆசிரியரின் தேர்வுகள்...