‘மும்பை அணிக்காக ஆடியது போன்று செயல்பட வேண்டும்’ - பிரித்வி ஷாவுக்கு ரஹானே அறிவுரை


‘மும்பை அணிக்காக ஆடியது போன்று செயல்பட வேண்டும்’ - பிரித்வி ஷாவுக்கு ரஹானே அறிவுரை
x
தினத்தந்தி 2 Oct 2018 10:15 PM GMT (Updated: 2 Oct 2018 10:03 PM GMT)

பயிற்சியின்போது மும்பை அணிக்காக ஆடியது போன்று செயல்பட வேண்டும் என பிரித்வி ஷாவுக்கு ரஹானே அறிவுரை கூறினார்.

ராஜ்கோட்,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நாளை தொடங்க உள்ள நிலையில் பயிற்சிக்கு பிறகு இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 18 வயதான பிரித்வி ஷாவை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அவரை, அவரது இளம் வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம். பிரித்வி ஷா அதிரடியாக ஆடக்கூடிய தொடக்க ஆட்டக்காரர். இந்திய ஏ அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதற்கு கிடைத்த பரிசு தான் இது.

இந்த டெஸ்டில் லோகேஷ் ராகுலுடன் தொடக்க ஆட்டக்காரராக யார் களம் இறங்குவார் (பிரித்வி ஷா அல்லது மயங்க் அகர்வால்) என்பது தெரியாது. ஆனால் ஆடும் லெவனில் இடம் பெறும் வீரருக்கு திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாகும். பிரித்வி ஷா நன்றாக செயல்படுவார் என்று உறுதியாக நம்புகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகள். ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காகவும், இந்திய ஏ அணிக்காகவும் பேட்டிங் செய்தது போன்று இந்திய அணிக்காகவும் அவர் ஆட வேண்டும் என்று விரும்புகிறேன்.

இங்குள்ள சீதோஷ்ண நிலையை நன்கு அறிவோம். இங்கு எப்படி செயல்பட வேண்டும் என்று தெரியும். ஆனால் இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலை வித்தியாசமானது. எனவே இங்குள்ள நிலைமைக்கு ஏற்ப மனரீதியாக சீக்கிரம் தயாராக வேண்டும். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி முழுமையாக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே எங்களது இலக்கு என்று ரஹானே கூறினார்.


Next Story