இந்திய டெஸ்ட் அணி: அறிமுகம் ஆகிறார், பிரித்வி ஷா


இந்திய டெஸ்ட் அணி: அறிமுகம் ஆகிறார், பிரித்வி ஷா
x
தினத்தந்தி 3 Oct 2018 11:30 PM GMT (Updated: 3 Oct 2018 7:53 PM GMT)

இந்திய டெஸ்ட் அணியில், தொடக்க ஆட்டக்காரராக பிரித்வி ஷா அறிமுகம் ஆக உள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் ஷிகர் தவான், முரளிவிஜய் ஆகியோர் கழற்றி விடப்பட்டதால் லோகேஷ் ராகுலுடன் தொடக்க ஆட்டக்காரராக ஆடும் அதிர்ஷ்டம் 18 வயதான பிரித்வி ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் இந்தியாவின் 293 டெஸ்ட் வீரராக அடியெடுத்து வைக்கிறார்.

மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷா, தனது 14-வது வயதில் பள்ளி கிரிக்கெட்டில் 546 ரன்கள் (330 பந்து) குவித்து சாதனை படைத்தவர். ரஞ்சி மற்றும் துலீப் கோப்பை கிரிக்கெட் இரண்டிலும் தனது அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இங்கிலாந்தில் நடந்த இந்திய ‘ஏ’ அணிக்கான தொடரில் அதிகபட்சமாக மொத்தம் 603 ரன்கள் எடுத்தார். 14 முதல்தர போட்டிகளில் விளையாடி 7 சதம், 5 அரைசதம் உள்பட 1,418 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் (19 வயதுக்குட்பட்டோர்) பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரித்வி ஷா தான் கேப்டனாக செயல்பட்டார். மும்பை ஜூனியர் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார்.

தனது 4-வது வயதிலேயே தாயை இழந்த பிரித்வி ஷாவுக்கு, அவரது தந்தை பங்கஜ் தான் வழிகாட்டி ஆவார். மகன் கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக தொழிலை விட்டுவிட்டு தினமும் அகாடமிக்கு பயிற்சிக்கு அழைத்து செல்வது பங்கஜ் தான். இதற்காக தினமும் 3 மணி நேரத்திற்கு மேலாக மகனுடன் பயணிப்பார். மகன் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிக்க வேண்டும் என்ற அவரது கனவு தற்போது நனவாகியுள்ளது.

Next Story