ராஜ்கோட் டெஸ்ட் :குல்தீப் சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்; இந்தியா அபார வெற்றி


ராஜ்கோட் டெஸ்ட் :குல்தீப் சுழலில் சிக்கிய வெஸ்ட் இண்டீஸ்; இந்தியா அபார வெற்றி
x
தினத்தந்தி 6 Oct 2018 9:52 AM GMT (Updated: 6 Oct 2018 9:52 AM GMT)

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ராஜ்கோட், 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது. புதுமுக வீரர் பிரித்வி ஷா 134 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் விராட் கோலி (72 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (17 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நீடித்தது. அனுபவமற்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை நமது வீரர்கள் நொறுக்கித் தள்ளினர். கேப்டன் கோலி சற்று நிதானம் காட்ட, ரிஷாப் பான்ட் அதிரடியாக ஆடினார். கீமோ பால், ரோஸ்டன் சேசின் பந்து வீச்சில் சிக்சர்களை பறக்க விட்டார். மறுமுனையில் கோலி பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 24-வது சதத்தை பூர்த்தி செய்தார். சதத்தை நெருங்கிய ரிஷாப் பான்ட் 92 ரன்களில் (84 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) தேவேந்திர பிஷூவின் சுழற்பந்து வீச்சில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் ஆகிப்போனார். அடுத்து ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இறங்கினார். அணியின் ஸ்கோர் 534 ரன்களாக உயர்ந்தபோது, விராட் கோலி 139 ரன்களில் (230 பந்து, 10 பவுண்டரி) பந்தை தூக்கியடித்தபோது கேட்ச் ஆனார்.

இதைத் தொடர்ந்து வந்த அஸ்வின் (7 ரன்), குல்தீப் யாதவ் (12 ரன்), உமேஷ் யாதவ் (22 ரன்) உள்ளிட்டோர் அதிக நேரம் நிலைக்கவில்லை. இதற்கிடையே அரைசதத்தை கடந்த பிறகு அட்டகாசப்படுத்திய ஜடேஜா, சுழற்பந்து வீச்சாளர்கள் தேவேந்திர பிஷூ, ரோஸ்டன் சேசின் ஓவர்களில் மொத்தம் 5 சிக்சர்களை விரட்டியடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதில் ஒரு சிக்சர் அணியின் ஸ்கோர் 600 ரன்களை கடக்க உதவியது. 78 ரன்களில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ஜடேஜா, கடைசி விக்கெட் ஜோடியான முகமது ஷமியின் துணையுடன் தனது முதலாவது சர்வதேச சதத்தை எட்டினார். இது அவரது சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜடேஜா செஞ்சுரி போட்டதும், இந்திய அணி தனது இன்னிங்சை முடித்துக் கொண்டது. இதன்படி இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 649 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ஜடேஜா 100 ரன்களுடனும் (132 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), முகமது ஷமி 2 ரன்னுடனும் (6 பந்து) அவுட் ஆகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணியின் மெகா ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1979-ம் ஆண்டு கான்பூரில் நடந்த டெஸ்டில் 7 விக்கெட்டுக்கு 644 ரன்கள் எடுத்ததே வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்சமாக இருந்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்பார்த்தது போலவே திணறியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் (2 ரன்), கீரன் பவெல் (1 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காலி செய்தார். இதன் பின்னர் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவின் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிரண்டனர். 2-வது நாள் முடிவில் அந்த அணி முதல் இன்னிங்சில் 29 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 94 ரன்களுடன் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் 27 ரன்களுடனும், கீமோ பால் 13 ரன்களுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். இந்திய தரப்பில் ஷமி 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சேஸ் 53 ரன்கள் எடுத்து அஸ்வின் சுழலில் போல்டானார். பால் அதிரடியாக விளையாடி 47 ரன்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த லெவிஸ், கேப்ரியல் ஆகியோரையும் அஸ்வின் சாய்க்க, அந்த அணி 48 ஓவர்களில் 181 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து பாலோ ஆன் ஆனது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டையும் ஷமி 2 விக்கெட்டையும் உமேஷ் யாதவ், குல்தீப், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பாலோ ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆட்டத்தை தொடர்ந்தது பிராத்வொயிட் 10 ரன்களில் அஸ்வின் சுழலில் பிருத்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பாவெலும் (21 ரன்) ஷான் ஹோப்பும் ஆடினர். இன்றைய இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 196  ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும்  272 ரன்களில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

Next Story