கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி + "||" + First Test against West Indies: Indian team innings win

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்றது.
ராஜ்கோட்,

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் மாயாஜால பந்து வீச்சால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 149.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 139 ரன்னும், அறிமுக வீரர் பிரித்வி ஷா 134 ரன்னும், ரவீந்திர ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 100 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் தேவேந்திர பிஷூ 4 விக்கெட்டும், ஷெர்மன் லீவிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 29 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து இருந்தது. ரோஸ்டன் சேஸ் 27 ரன்னுடனும், கீமோ பால் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ரோஸ்டன் சேஸ், கீமோ பால் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். கீமோ பால் அதிரடியாக அடித்து ஆடினார். அவர் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் சிக்சர் தூக்கினார். ரோஸ்டன் சேஸ் நிதானமாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் ஆடினார். அணியின் ஸ்கோர் 147 ரன்னாக உயர்ந்த போது கீமோ பால் (47 ரன்கள், 49 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன்) உமேஷ் யாதவ் பந்து வீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 7-வது விக்கெட்டுக்கு ரோஸ்டன் சேஸ்-கீமோ பால் ஜோடி 73 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் எஞ்சிய விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. ரோஸ்டன் சேஸ் (53 ரன்கள், 79 பந்துகளில் 8 பவுண்டரியுடன்), ஷெர்மன் லீவிஸ் (0), ஷனோன் கேப்ரியல் (1 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அடுத்தடுத்து சாய்த்து அசத்தினார். மதிய உணவு இடைவேளைக்கு முன்பு வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 48 ஓவர்களில் 181 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. தேவேந்திர பிஷூ 17 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பாலோ-ஆன் ஆகி தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் அனுபவமற்ற வீரர்கள், இந்திய அணியின் அபாரமான சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் திணறினார்கள். அத்துடன் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. கீரன் பவெல் மட்டுமே சற்று நிலைத்து நின்று ஆடி ரன் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். தாக்குப்பிடித்து நின்றதுடன் அடித்து ஆடிய கீரன் பவெல் 93 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 83 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் பிரித்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

தேனீர் இடைவேளைக்கு பிறகு வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 50.5 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாவ்ரிச் 16 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் சாய்த்தார்கள். நேற்று ஒரே நாளில் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். வெஸ்ட்இண்டீஸ் அணி 3 நாளுக்குள் மோசமான தோல்வியை சந்தித்தது. அறிமுக போட்டியில் சதம் அடித்து கலக்கிய இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது.

‘பேட்டிங்கில் சரியாக செயல்படாததால் தோல்வி கண்டோம்’ - பிராத்வெய்ட்

வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் இந்த போட்டி தொடரை ஒப்பிடமுடியாது. அங்குள்ள சூழ்நிலை மிகப்பெரிய சவாலானதாகும். இங்குள்ள சூழ்நிலையில் எங்களால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை அறிவோம். எங்களது திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினோம். வெஸ்ட்இண்டீஸ் அணியின் செயல்பாடு குறித்து பேச வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். அவர்கள் தங்களது தவறுகளை சரி செய்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். எதிரணியினர் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து அதிக கவனம் செலுத்த விரும்பவில்லை. பிரித்வி ஷா, ஜடேஜாவின் பேட்டிங் மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் போட்டியிலேயே பிரித்வி ஷா பந்து வீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்தும் வகையில் விளையாடி அவரிடம் வித்தியாசமான திறமை இருக்கிறது என்பதை வெளிக்காட்டினார். முதல் இன்னிங்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ்யாதவ், முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இல்லாத போதிலும் முகமது ஷமி புதிய பந்தில் விக்கெட்டை வீழ்த்தினார். புதிய விதிமுறையின் படி போட்டியின் நடுவே தண்ணீர் குடிக்க இடைவெளி கிடையாது என்பதால் 45 நிமிடம் தண்ணீர் குடிக்காமல் விளையாடுவது என்பது சற்று சிரமமாக தான் இருந்தது. சூழ்நிலைக்கு தகுந்தபடி இந்த விதிமுறையில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலனை செய்வார்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து வெஸ்ட்இண்டீஸ் அணியின் பொறுப்பு கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் நல்ல தொடக்கத்தை காணவில்லை. எல்லா புகழும் இந்திய அணியினரையே சாரும். அவர்கள் சிறப்பாக ஆடினார்கள். எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் நிரூபித்து காட்டினார்கள். பேட்டிங்கில் நாங்கள் எந்தவொரு நல்ல இணை ஆட்டத்தையும் அளிக்கவில்லை. அதுவே எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பேட்ஸ்மேன்கள் தங்கள் முழு திறமைக்கு ஏற்ப விளையாட வேண்டும். இரண்டு அல்லது மூன்று நல்ல இணை ஆட்டம் அமைய வேண்டியது அவசியமானதாகும். நாங்கள் திட்டமிட்டு தான் களம் இறங்கினோம். ஆனால் எங்கள் யுக்திக்கு சரியான பலன் கிடைக்கவில்லை. அடுத்த ஆட்டத்துக்குள் ஜாசன் ஹோல்டர் உடல்தகுதி பெற்றுவிடுவார் என்று உறுதியாக சொல்ல முடியாது’ என்றார்.

இந்திய அணியின் இமாலய வெற்றி

* ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே, டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் ரன்கள் வித்தியாசத்தில் கண்ட மிகப்பெரிய வெற்றியாகும். இந்த வகையில் பெங்களூருவில் கடந்த ஜூன் மாதம் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றதே இமாலய வெற்றியாக இருந்தது.

* இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 593 பந்துகளை எதிர்கொண்டு 20 விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குறைந்த பந்துகளில் வெஸ்ட்இண்டீஸ் அணி தோல்வி கண்டு மோசமான சாதனை படைத்தது. இதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக அந்த அணி 614 பந்துகளை எதிர்கொண்டு தோல்வியை சந்தித்ததே மோசமானதாக இருந்தது.

* அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்ற 6-வது இந்திய வீரர் என்ற பெருமையை பிரித்வி ஷா பெற்றார். ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த பிரவின் ஆம்ரே, ஆர்.பி.சிங், ஆர்.அஸ்வின், ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் இந்த பெருமையை பெற்றவர்கள் ஆவர்.

* ராஜ்கோட் டெஸ்டில் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் குல்தீப் யாதவ் மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) சர்வதேச போட்டியிலும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 7-வது பவுலர் என்ற சிறப்பை பெற்றார். இந்திய வீரர்களில் புவனேஷ்வர்குமாருக்கு அடுத்த படியாக குல்தீப் யாதவ் தான் இந்த சாதனையை படைத்துள்ளார்.

* இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணியினரும் சேர்ந்து மொத்தம் 20 சிக்சர்கள் (இந்தியா-11, வெஸ்ட்இண்டீஸ்-9) விளாசினார்கள். இதற்கு முன்பு இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் (மும்பையில் 2009-ம் ஆண்டு நடந்த இந்தியா-இலங்கை டெஸ்ட்) 20 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனை சமன் செய்யப்பட்டது.