“லாரா அணியில் இருந்த போதே இந்திய மண்ணில் சாதிக்க முடியவில்லை” - வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர்


“லாரா அணியில் இருந்த போதே இந்திய மண்ணில் சாதிக்க முடியவில்லை” - வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர்
x
தினத்தந்தி 10 Oct 2018 9:42 PM GMT (Updated: 10 Oct 2018 9:42 PM GMT)

லாரா அணியில் இருந்த போதே இந்திய மண்ணில் சாதிக்க முடியவில்லை என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-வது நாளுக்குள் ‘சரண்’ அடைந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தழுவிய நிலையில், அணி வீரர்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் கிளம்பின. வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர்கள் பணம் கொழிக்கும் ஐ.பி.எல். போன்ற 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடுவதில் தான் ஆர்வம் காட்டுவதாக முன்னாள் கேப்டன் கார்ல் ஹூப்பர் குற்றம் சாட்டியிருந்தார். இந்தியாவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான இந்தியாவுக்கு எதிராக, அதுவும் அவர்களது சொந்த ஊரில் விளையாடுகிறோம். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் 1994-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய மண்ணில் டெஸ்டில் வெற்றி பெறவில்லை என்பது தெரியும். அந்த சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரையன் லாரா போன்ற ஜாம்பவான்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். லாரா கூட, இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று தந்ததில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான எந்த கருத்தையும் தெரிவிக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை ஒரு அணியாக என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் ஏதாவது சொல்லி கொண்டு தான் இருப்பார்கள்.

இவ்வாறு ஹோல்டர் கூறினார்.


Next Story