கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: போராடி ‘டிரா’ செய்தது ஆஸ்திரேலியா கவாஜா சதம் அடித்தார் + "||" + First Test Against Pakistan Draw Australia Usman Khawaja scored a hundred

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: போராடி ‘டிரா’ செய்தது ஆஸ்திரேலியா கவாஜா சதம் அடித்தார்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: போராடி ‘டிரா’ செய்தது ஆஸ்திரேலியா கவாஜா சதம் அடித்தார்
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கவாஜாவின் சதத்தின் உதவியுடன் போராடி டிரா செய்தது.
துபாய்,

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 482 ரன்களும், ஆஸ்திரேலியா 202 ரன்களும் எடுத்தன.


ஆஸ்திரேலியாவுக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காமல் 280 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 462 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. உஸ்மான் கவாஜா 50 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 34 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பொறுமையாக ஆடிய கவாஜாவும், டிராவிஸ் ஹெட்டும் உணவு இடைவேளை வரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். அணியின் ஸ்கோர் 219 ரன்களை எட்டிய போது, டிராவிஸ் ஹெட் 72 ரன்களில் (175 பந்து) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த லபுஸ்சானே 13 ரன்னில் நடையை கட்டினார்.

இதன் பிறகு கவாஜாவும், கேப்டன் டிம் பெய்னும் கைகோர்த்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற போராடினர். அபாரமாக ஆடிய கவாஜா தனது 7-வது சதத்தை நிறைவு செய்தார். நங்கூரம் போல் நிலைத்து நின்று மிரட்டிய கவாஜா 141 ரன்களில் (302 பந்து, 11 பவுண்டரி), யாசிர் ஷாவின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆசிய மண்ணில் 4-வது இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர் என்ற சிறப்புடன் கவாஜா வெளியேறினார். அடுத்து மிட்செல் ஸ்டார்க் (1 ரன்), பீட்டல் சிடில் (0) ஒரே ஓவரில் ஆட்டம் இழக்க, ஆஸ்திரேலியா நெருக்கடியில் சிக்கியது.

இதன் பிறகு கேப்டன் டிம் பெய்னுடன், பவுலர் நாதன் லயன் இணைந்தார். பாகிஸ்தான் அணி நெருக்கமான பீல்டிங் வியூகம் அமைத்து 7 பவுலர்களை கொண்டு தாக்குதல் தொடுத்தது. இதனால் இறுதிகட்டத்தில் பரபரப்பும் தொற்றிக் கொண்டது. யாசிர் ஷா, பிலால் ஆசிப் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளித்த பெய்ன், லயன் ஜோடி 12 ஓவர்கள் தாக்குப்பிடித்து ஒரு வழியாக தங்கள் அணியை காப்பாற்றியது.

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 139.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. டிம் பெய்ன் 61 ரன்களுடனும் (194 பந்து, 5 பவுண்டரி), நாதன் லயன் 5 ரன்னுடனும் (34 பந்து) அவுட் ஆகாமல் இருந்தனர்.

அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அபுதாபியில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. பீல்டிங்கின் போது இடது கை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் 2-வது டெஸ்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.