‘ஆஸ்திரேலிய தொடரில் உமேஷ் யாதவ் இடம் பெறுவார்’ இந்திய கேப்டன் கோலி பேட்டி


‘ஆஸ்திரேலிய தொடரில் உமேஷ் யாதவ் இடம் பெறுவார்’ இந்திய கேப்டன் கோலி பேட்டி
x
தினத்தந்தி 14 Oct 2018 10:15 PM GMT (Updated: 14 Oct 2018 8:39 PM GMT)

அடுத்து வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இடம் பெறுவார் என்று இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார்.

ஐதராபாத், 

அடுத்து வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இடம் பெறுவார் என்று இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார்.

கோலி பேட்டி

ஐதராபாத் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியை துவம்சம் செய்த பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:–

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த டெஸ்ட் போட்டி 3–வது நாளில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. 5–வது நாள் வரை நீடிக்க கூடும் என்று நினைத்தேன். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எங்களுக்கு நன்கு நெருக்கடி கொடுத்தனர். முதல் இன்னிங்சில் மிகப்பெரிய முன்னிலையை எதிர்பார்த்தோம். ஆனாலும் 56 ரன்கள் முன்னிலை கிடைத்ததே போனஸ்தான். உள்ளூர் சூழலில் எப்படி பந்து வீசி எதிரணிக்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

‌ஷர்துல் தாகூர் காயத்தால் பந்து வீச முடியாத நிலையில், உமேஷ் யாதவ் கூடுதல் பொறுப்புடன் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பானது. உமேஷ் யாதவ், களம் இறங்கும் போதெல்லாம் 100 சதவீதத்திற்கு மேல் திறமையை வெளிப்படுத்தக்கூடியவர். அவரை நினைத்து பெருமைப்படுகிறோம்.

மூன்று வீரர்கள்

மூன்று இளம் வீரர்கள் டெஸ்டில் தங்களுக்கு கிடைத்த (இங்கிலாந்து தொடரில் ஹனுமா விஹாரி மற்றும் ரிஷாப் பான்ட், பிரித்வி ஷா) வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு விட்டனர். அதிலும் பிரித்வி ஷா தனது முதல் தொடரிலேயே தொடர்நாயகன் விருதை பெற்றது அற்புதமானது.

உமேஷ் யாதவும் இப்போது 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இருப்பதால் அடுத்து வரும் 4 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சில் யார் யாருக்கு வாய்ப்பு அளிப்பது என்பதை முடிவு செய்வது கடினமாக இருக்கும். இங்கிலாந்து மண்ணில் போன்று ஆஸ்திரேலியாவில் பந்து மிக அதிகமாக ‘ஸ்விங்’ ஆகாது. அங்கு மிக வேகமாக சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து வீச வேண்டும். அந்த வகையில் உமேஷ் யாதவ், ஆஸ்திரேலிய தொடரில் களம் காணும் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு கோலி கூறினார்.

ரவிசாஸ்திரி பாராட்டு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில், ‘இங்கிலாந்து தொடரில் 4 டெஸ்டுகளில் வெளியே உட்கார வைக்கப்பட்ட உமேஷ் யாதவ், இங்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இனி எங்களுக்கு தான் யாரை தேர்வு செய்வது என்ற தலைவலி இருக்கும். பிரித்வி ஷா கிரிக்கெட் ஆட பிறந்தவர். 8 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடி வருகிறார். கொஞ்சம் சச்சின் தெண்டுல்கர், கொஞ்சம் ஷேவாக் கலந்த கலவையாக பிரித்வி ஷா தெரிகிறார். நடக்கும் போது லாராவையும் நினைவூட்டுகிறார். லோகேஷ் ராகுல் உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரர். தனது ஆட்டத்திறனை மேம்படுத்த மிக கடினமாக உழைக்கிறார்’ என்றார்.

தொடர்நாயகன் விருது பெற்ற பிரித்வி ஷா கூறும் போது, ‘எனது முதல் தொடரையே 2–0 என்ற கணக்கில் வென்று, தொடர்நாயகன் விருதும் பெற்றிருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த தருணத்தை அனுபவித்து மகிழ்கிறேன். இந்திய அணியில் வீரர்கள் அனைவரும் ஒரு குடும்பம் போன்று பழகுகிறோம். இங்கு ஜூனியர், சீனியர் என்ற பாகுபாடு கிடையாது. எனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை நன்றாக தொடங்கி இருக்கிறேன். அடுத்து வரும் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என்றார்.

ஹோல்டர் கருத்து

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் கருத்து தெரிவிக்கும் போது ‘2–வது இன்னிங்சில் நாங்கள் பேட்டிங் செய்த விதம் கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. எல்லா சிறப்பும் இந்திய அணி வீரர்களையே சாரும். அவர்கள் மெச்சத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் நிறைய விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு சுழற்சி இல்லை. எனவே கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என்றார்.


Next Story