நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 போட்டிக்கு தடை


நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 போட்டிக்கு தடை
x
தினத்தந்தி 16 Oct 2018 10:30 PM GMT (Updated: 16 Oct 2018 7:29 PM GMT)

நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 ஒரு நாள் போட்டிகளில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

மும்பை,

ஐதராபாத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த டெஸ்டில் 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் கீரன் பவெல் (0) ஆட்டம் இழந்த விதம் சர்ச்சையை கிளப்பியது. அவர், அஸ்வினின் சுழற்பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் ஆனார். டி.வி. ரீப்ளேயில் ரஹானே, பந்தை தரையோடு பிடிப்பது போல் தெரிந்தது. இதனால் சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கீரன் பவெல் அவுட் என்று 3-வது நடுவர் தீர்ப்பு வழங்கினார்.

இதனால் அதிருப்தி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா (ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்) டி.வி. நடுவரான நைஜல் லாங்கின் அறைக்கு சென்று அவரை வசைபாடிய விஷயம் இப்போது கசிந்துள்ளது. அத்துடன் இல்லாமல் 4-வது நடுவர் நிதின் மெனோனின் (மாற்று நடுவர்) இருப்பிடத்துக்கு சென்று வீரர்கள் முன்னிலையில் அவருக்கு எதிராக முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இது குறித்து கள நடுவர்கள் புகார் அளித்ததன் பேரின், ஐ.சி.சி. போட்டி நடுவர் கிறிஸ் பிராட் விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து ஸ்டூவர்ட் லாவுக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதமாகவும், 3 தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் ஒரு தகுதி இழப்பு புள்ளி பெற்று இருந்தார். இதனால் அவரது தகுதி இழப்பு புள்ளி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. 24 மாதத்திற்குள் 4 தகுதி இழப்பு புள்ளி பெற்றால் 2 போட்டிக்கு தடை விதிக்கப்படும்.

இதன்படி ஸ்டூவர்ட் லாவுக்கு, இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது முதல் இரு ஒரு நாள் போட்டிகளின் போது அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியினருடன் சேர்ந்து மைதானத்திற்குள் செல்ல முடியாது.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 21-ந்தேதி கவுகாத்தியிலும், 2-வது ஒரு நாள் போட்டி 24-ந்தேதி விசாகப்பட்டினத்திலும் நடக்கிறது.


Next Story