ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 19 Oct 2018 10:15 PM GMT (Updated: 19 Oct 2018 8:10 PM GMT)

அபுதாபியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 373 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்த பாகிஸ்தான் அணி தொடரையும் வசப்படுத்தியது.

அபுதாபி, 

அபுதாபியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 373 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்த பாகிஸ்தான் அணி தொடரையும் வசப்படுத்தியது.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 16-ந்தேதி அபுதாபியில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 282 ரன்களும், ஆஸ்திரேலியா 145 ரன்களும் எடுத்தன. 137 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 400 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பாபர் அசாம் 99 ரன்களும், கேப்டன் சர்ப்ராஸ் அகமது 81 ரன்களும் விளாசினர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 538 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.4 ஓவர்களில் 164 ரன்களில் அடங்கியது. இதனால் 373 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லபஸ்சானே 43 ரன்களும், டிராவிஸ் ஹெட் 36 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 31 ரன்களும் எடுத்தனர். காயம் காரணமாக உஸ்மான் கவாஜா ஆடவில்லை. பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் 17 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

ரன் வித்தியாசம் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் மெகா வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு இதே மைதானத்தில் 2014-ம் ஆண்டு 356 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றியே பெரிய வெற்றியாக இருந்தது. முந்தைய நாள் பேட்டிங்கின் போது ஹெல்மெட்டில் பந்து பலமாக தாக்கியதால் அதிர்வுக்குள்ளான பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ப்ராஸ் அகமது தலைவலி இருப்பதாக உணர்ந்ததால் நேற்று பீல்டிங் செய்யவரவில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு ‘ஸ்கேன்’ பரிசோதனை எடுத்து பார்க்கப்பட்டது. இதனால் நேற்றைய தினம் அவருக்கு பதிலாக ஆசாத் ஷபிக் அணியை வழி நடத்தினார். மாற்று விக்கெட் கீப்பராக முகமது ரிஸ்வான் செயல்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகளை அள்ளிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ் ஆட்டநாயகனாகவும், தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 16 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் நடந்து வருகிறது. இங்கு வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் டெஸ்ட் போட்டி ஒன்றில் 10 விக்கெட்டுகள் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.

அடுத்து ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் வருகிற 24-ந்தேதி நடக்கிறது.

Next Story