கிரிக்கெட்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதிய பரபரப்பான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது + "||" + India-West Indies ended in a frenzy game 'Die'

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதிய பரபரப்பான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதிய பரபரப்பான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான பரபரப்பான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ‘டை’யில் முடிந்தது.
விசாகப்பட்டினம்,

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக கலீல் அகமது நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒஷானே தாமசுக்கு பதிலாக புதுமுக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஒபேட் மெக்கோய் இடம் பிடித்தார்.


‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்தியாவின் இன்னிங்சை தொடங்கிய ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ஏமாற்றம் அளித்தனர். வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் ஷாட் பிட்ச்சாக வீசிய பந்துக்கு ரோகித் சர்மா (4 ரன்) இரையானார். ஷிகர் தவான் 29 ரன்களில் (30 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இதைத் தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலியும், அம்பத்தி ராயுடுவும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்தினர். அவசரம் காட்டாமல் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டிற்கு விரட்டியடித்தனர். கோலி 43 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை எதிரணி கேப்டன் ஹோல்டர் கோட்டை விட்டார். மறுவாழ்வு பெற்ற கோலி, அதன் பிறகு துரிதமான ரன்சேகரிப்பில் கவனம் செலுத்தினார். 19.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை தொட்டது.

அணியின் ஸ்கோர் 179 ரன்களாக உயர்ந்த போது, அம்பத்தி ராயுடு 73 ரன்களில்(80 பந்து, 8 பவுண்டரி) போல்டு ஆனார். அடுத்து விக்கெட் கீப்பர் டோனி இறங்கினார். பார்ம் இன்றி தவிக்கும் டோனி ஒரு சிக்சருடன் 20 ரன்கள் (25 பந்து) எடுத்த நிலையில் மெக்கோயின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அவருக்கு பிறகு வந்த ரிஷாப் பான்ட் 17 ரன்களில் வெளியேறினார்.

மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைகொண்டு விளையாடிய விராட் கோலி பவுண்டரி அடித்து தனது 37-வது சதத்தை நிறைவு செய்தார். முதலாவது ஆட்டத்திலும் கோலி சதம் கண்டது நினைவிருக்கலாம். முன்னதாக 10 ஆயிரம் ரன்கள் கடந்து ரசிகர்களின் பாராட்டுகளை அவர் பெற்றார்.

செஞ்சுரிக்கு பிறகு விசுவரூபம் எடுத்த விராட் கோலி, மெக்கோய் மற்றும் கெமார் ரோச் ஓவர்களில் சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினார். அவரது அதிரடி ஜாலத்தால் இந்திய அணி 300 ரன்களை தாண்டியது. இதற்கு மத்தியில் ஜடேஜா 13 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. விராட் கோலி 157 ரன்களுடன் (129 பந்து, 13 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். கடைசி 8 ஓவர்களில் மட்டும் இந்திய வீரர்கள் 91 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடியது. 78 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பும், ஷிம்ரோன் ஹெட்மயரும் புத்துயிர் அளித்தனர். இந்திய பந்து வீச்சை வறுத்தெடுத்த ஹெட்மயர், சுழற்பந்து வீச்சில் மட்டும் 7 சிக்சர்களை ஓட விட்டார்.

அதிரடியில் மிரட்டிய ஹெட்மயர் 94 ரன்களில் இருந்த போது (64 பந்து, 4 பவுண்டரி, 7 சிக்சர்) யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் மறுபடியும் சிக்சருக்கு முயற்சித்த போது கேட்ச் ஆகிப் போனார். அதன் பிறகே இந்திய வீரர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு 221 ரன்களுடன் (31.5 ஓவர்) வலுவான நிலையில் காணப்பட்டது.

இறுதி கட்டத்தில் இந்திய வீரர்கள் வெகுவாக நெருக்கடி கொடுத்தனர். அந்த அணி மேலும் சில விக்கெட்டுகளை இழக்க, பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதற்கிடையே ஷாய் ஹோப் தனது 2-வது சதத்தை எட்டினார்.

கடைசி 2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீசின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை வீசிய முகமது ஷமி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதையடுத்து கடைசி ஓவரில் 14 ரன்கள் அந்த அணிக்கு தேவையாக இருந்தது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசினார். இதில் முதல் பந்தில் ஹோப் 1 ரன் எடுத்தார். அடுத்த பந்தை ஆஷ்லே நர்ஸ் சந்தித்த போது ‘லெக்-பை’ வகையில் 4 ரன்கள் வந்தது. 3-வது பந்தில் 2 ரன் எடுத்த நர்ஸ் 4-வது பந்தில் கேட்ச் ஆனார். 5-வது பந்தை சந்தித்த ஹோப் 2 ரன் எடுத்தார்.

இதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. கடைசி பந்தை எதிர்கொண்ட ஹோப், ‘பாயிண்ட்’ திசையை நோக்கி வலுவாக அடித்தார். எல்லைக்கோட்டை நோக்கி ஓடிய அந்த பந்தை அம்பத்தி ராயுடு பாய்ந்து விழுந்து பிடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரது கையில் சிக்காமல் பவுண்டரியாக மாறியது. இதனால் திரிலிங்கான இந்த ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் (டை) முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 321 ரன்கள் சேர்த்தது. ஷாய் ஹோப் 123 ரன்களுடன் (134 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் 9-வது ‘டை’ இதுவாகும். விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஏற்கனவே முதலாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது ஒரு நாள் போட்டி வருகிற 27-ந்தேதி புனேயில் நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா திணறல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முன்னணி விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி வருகிறது.
2. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - சிட்னியில் இன்று நடக்கிறது
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது.
3. வீழ்வோம் என்று நினைத்தாயோ...!
சென்னையில் பெய்ய வேண்டிய மழை சிட்னியில் பெய்து தொலைத்து விட்டது. இந்தியா ஆஸ்திரேலியாவின் மென்னியைப் பிடிக்க முயன்று கொண்டிருக்கையில் மழை ஆட்டத்தின் மென்னியையே பிடித்து விட்டது.
4. அமைதி முயற்சிகளை இந்தியா நிராகரிக்கிறது: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சொல்கிறார்
அமைதி முயற்சிகளை இந்தியா நிராகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.
5. டிராவை நோக்கி சிட்னி டெஸ்ட்: 5-ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு
இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி செல்கிறது.