கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஆட்டம் ‘டை’:“பனியின் தாக்கத்தால் பந்து வீசுவதற்கு கடினமாக இருந்தது”இந்திய பவுலர் குல்தீப் யாதவ் பேட்டி + "||" + Indian bowler Kuldeep Yadav Interview

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஆட்டம் ‘டை’:“பனியின் தாக்கத்தால் பந்து வீசுவதற்கு கடினமாக இருந்தது”இந்திய பவுலர் குல்தீப் யாதவ் பேட்டி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஆட்டம் ‘டை’:“பனியின் தாக்கத்தால் பந்து வீசுவதற்கு கடினமாக இருந்தது”இந்திய பவுலர் குல்தீப் யாதவ் பேட்டி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் பனியின் தாக்கத்தால் பந்து வீசுவதற்கு கடினமாக இருந்தது என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறினார்.
விசாகப்பட்டினம், 

விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான பரபரப்பான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி சமனில் (டை) முடிந்தது. இதில் கேப்டன் விராட் கோலியின் சதத்தின் (157 ரன்) உதவியுடன் இந்தியா நிர்ணயித்த 322 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு கட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று விடும் என்றே தோன்றியது. ஆனால் ஹெட்மயர் (7 சிக்சருடன் 94 ரன்) கேட்ச் ஆனதும் ஆட்டம் கொஞ்சம் இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் சதம் அடித்து போராடிக்கொண்டிருந்தார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், இறுதி ஓவரில் முதல் 5 பந்துகளில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. கடைசி பந்தை எதிர்கொண்ட ஷாய் ஹோப் (123 ரன்) அதை பவுண்டரிக்கு விரட்டியடித்து ஆட்டத்தை சமனுக்கு (7 விக்கெட்டுக்கு 321 ரன்) கொண்டு வந்தார்.

கோலி கருத்து

இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இரவில் காற்றில் ஈரப்பதம் குறைந்து வியர்த்து கொட்டும் என்பதால் ‘டாஸ்’ ஜெயித்தால் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு வீரர்களின் விருப்பமாக இருந்தது. தவிர, உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகள் வருகிறது. எல்லா நேரமும் 2-வது பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காது. அதனால் முதலில் பேட் செய்து, அதை வைத்து எதிரணியை மடக்க வேண்டும் என்று கருதியே டாசில் ஜெயித்ததும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தோம். நாங்கள் 275 ரன்கள் முதல் 280 ரன்கள் வரை இலக்காக மனதில் வைத்திருந்தோம். நான் அதிரடியாக ஆடியதால் கூடுதல் ரன்கள் வந்தது.

2-வது பேட்டிங்கின் போது ஆடுகளத்தன்மை வேறு விதமாக மாறியிருந்தது. ஒரு கட்டத்தில் அவர்களுக்கு ஓவருக்கு 6 ரன்களுக்கு குறைவாகவே தேவைப்பட்ட போது மிக வலுவாக நிலையில் இருந்தனர். அப்போது குல்தீப் யாதவ் ஒரு விக்கெட் எடுத்தார். யுஸ்வேந்திர சாஹல், உமேஷ் யாதவ், முகமது ஷமியும் நெருக்கடி கொடுத்தனர். எது எப்படியோ அதிர்ஷ்டவசமாக இறுதியில் ஆட்டம் சமனில் முடிந்தது’ என்றார்.

குல்தீப் பேட்டி

3 விக்கெட் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘இரவில் பனிப்பொழிவின் காரணமாக பந்து வீசுவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. பனியின் தாக்கத்தால் பந்து ஈரப்பதம் ஆனதால், அதை சரியாக பிடித்து வீச முடியாமல் சிரமப்பட்டேன். இது போன்ற சீதோஷ்ண நிலையில் பந்து வீசுவதற்கு நிறைய பயிற்சி எடுப்பது அவசியமாகும். வெற்றியை நோக்கி வேகமாக சென்ற அவர்களின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தியது மகிழ்ச்சியே. பனியின் தாக்கத்திற்கு மத்தியிலும் நாங்கள் நன்றாக பந்து வீசினோம் என்றே நினைக்கிறேன். ஹெட்மயர், அருமையாக ஆடினார். அவரை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. தொடக்கத்தில் அவர் எனது பந்து வீச்சில் தடுமாறினார். ஆனால் இரண்டு சிக்சர் அடித்ததும் ஆட்டத்தின் போக்கு மாறியது’ என்றார்.

டோனியின் வியூகம் முறியடிப்பு

ஷாய் ஹோப் இதுவரை இரண்டு சதங்கள் அடித்துள்ளார். சதம் கண்ட இரண்டு ஆட்டங்களுமே சமனில் தான் முடிந்திருக்கிறது. ஏற்கனவே 2016-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த போது அந்த ஆட்டமும் டை ஆனது. இரண்டு சதத்துடன் இரண்டு ‘டை’ சந்தித்த முதல் பேட்ஸ்மேன் ஷாய் ஹோப் தான்.

கடைசி பந்துக்கு முன்பாக இந்திய விக்கெட் கீப்பர் டோனியின் யோசனைப்படி கேப்டன் கோலி பீல்டிங்கில் சில மாற்றங்களை செய்தார். ஆனால் டோனியின் வியூகத்துக்கு பலன் இல்லாமல் போனது. இது பற்றி ஷாய் ஹோப் கூறும் போது, ‘உமேஷ் யாதவ் கடைசி பந்தை ஆப்-ஸ்டம்புக்கு சற்று வெளியே யார்க்கராக வீசப் போகிறார் என்பதை முன்கூட்டியே கணித்து விட்டேன். அத்தகைய பந்து போதுமான அளவுக்கு மட்டையில் பட்டால் பவுண்டரிக்கு ஓடி விடும். வலுவாக அடித்தால் சிக்சராக மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. சிக்சர் அடிக்க முடியவில்லை என்றாலும் பவுண்டரி அடித்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றி விட்டேன். இது போன்ற ஆட்டம் எனது நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. ஆனால் ஒரு அணியாக தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்’ என்றார்.