கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது + "||" + Will India respond to West Indies? The 4th one-day cricket match takes place today

வெஸ்ட் இண்டீசுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

வெஸ்ட் இண்டீசுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது
வெஸ்ட் இண்டீசுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி இன்று 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் களம் இறங்குகிறது.

மும்பை, 

வெஸ்ட் இண்டீசுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி இன்று 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் களம் இறங்குகிறது.

ஒரு நாள் கிரிக்கெட்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கவுகாத்தியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 3–வது ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. விசாகப்பட்டினத்தில் நடந்த 2–வது ஒரு நாள் போட்டி சமனில் முடிந்தது. இதனால் இந்த தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) பகல்–இரவு மோதலாக நடக்கிறது. முதலில் இந்த போட்டி அருகில் உள்ள புகழ்பெற்ற வான்கடே ஸ்டேடியத்தில் நடப்பதாக இருந்தது. பிறகு சில நடைமுறை சிக்கல் காரணமாக பிராபோர்னுக்கு மாற்றப்பட்டது. இந்த மைதானத்தில் 2006–ம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி இதுவாகும்.

டோனிக்கு நெருக்கடி

டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டியிலும் வெஸ்ட் இண்டீசை 3 நாட்களுக்குள் முடக்கிய இந்திய அணியால் ஒரு நாள் தொடரில் அதே போன்று அச்சுறுத்த முடியவில்லை. இந்திய அணியின் பேட்டிங்கில், மிடில் வரிசையில் பலவீனமாக இருப்பது மீண்டும் ஒரு முறை அப்பட்டமாகி இருக்கிறது. முந்தைய ஆட்டத்தில் விராட் கோலிக்கு, டோனி அல்லது ரிஷாப் பான்ட் யாராவது ஒருவர் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் நிச்சயம் வெற்றிக்கனியை பறித்திருக்க முடியும்.

டாப்–3 வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், மிடில் வரிசை பிரச்சினையைத் தான் சரி செய்ய வேண்டி இருக்கிறது. விக்கெட் கீப்பர் டோனி, களம் இறங்கிய கடந்த 13 ஒரு நாள் போட்டியில் ஒன்றில் கூட அரைசதம் அடிக்கவில்லை. அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை சிக்கலின்றி இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் எஞ்சிய ஆட்டங்களில் டோனி, ரன் குவித்தாக வேண்டும்.

ஆல்–ரவுண்டர்கள் இல்லாததும் ஒரு குறையாக இருக்கிறது. தசைப்பிடிப்பால் ஓய்வில் இருந்த ஆல்–ரவுண்டர் கேதர் ஜாதவ் மீண்டும் அழைக்கப்பட்டு இருக்கிறார். அவரது வருகையால் கேப்டன் கோலி உற்சாகமடைந்துள்ளார். ஏனெனில் இவரை பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக பயன்படுத்திக் கொள்ள முடியும். முந்தைய ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் கடைசி கட்டத்தில் நிறைய ரன்களை வாரி வழங்கினார். அதற்கு பரிகாரம் தேடும் வகையில் இன்றைய ஆட்டத்தில் பந்துவீசுவதற்கு காத்திருக்கிறார்.

கோலியின் சதம் தொடருமா?

முதல் மூன்று ஆட்டங்களிலும் சதம் அடித்து (140, 157, 107 ரன்) பிரமிக்க வைத்த இந்திய கேப்டன் கோலி, மும்பையிலும் முத்திரை பதிப்பாரா? என்ற ஆவல் எகிறியுள்ளது. இந்த முறையும் சதம் கண்டால், ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்த ஒரே வீரரான இலங்கை முன்னாள் வீரர் சங்கக்கராவின் சாதனையை சமன் செய்து விடுவார்.

மொத்தத்தில் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் ஒருசேர ஜொலிக்கும் போது தான் பதிலடி கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியும். தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள, இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி இருப்பதால் இந்திய வீரர்கள் கூடுதல் கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.

மிரட்டும் ஹோப்–ஹெட்மயர்

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக இளம் வீரர்கள் ஷாய் ஹோப்பும் (32, 123, 95 ரன்), ஹெட்மயரும் (106, 94, 37 ரன்) சுழற்பந்து வீச்சை சர்வசாதாரணமாக வெளுத்து கட்டுகிறார்கள். சாமுவேல்ஸ், ரோவ்மன் பவெலும் பார்முக்கு திரும்பினால், வெஸ்ட் இண்டீசின் பேட்டிங் மேலும் வலுவடையும்.

கடந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லே நர்ஸ் அதிரடியாக 40 ரன்கள் விளாசியதுடன், 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்–ரவுண்டராக மின்னினார். இவை எல்லாம் வெஸ்ட் இண்டீசின் உத்வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு மறுபடியும் அதிர்ச்சி அளிப்பதற்கு அவர்கள் வரிந்துகட்டுவதால், பரபரப்புக்கு குறைவிருக்காது.

இந்த மைதானத்தில் இதுவரை 8 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளது. இதில் இந்திய அணி ஒரே ஒரு ஆட்டத்தில் (1995–ம் ஆண்டு நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது) மட்டுமே விளையாடி இருக்கிறது. இது சிறிய மைதானம் ஆகும். ஆடுகளமும் பேட்டிங்குக்கு உகந்த வகையிலேயே இருக்கும். அதனால் இங்கும் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

வீரர்கள் பட்டியல்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், ரிஷாப் பான்ட் அல்லது ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், பும்ரா.

வெஸ்ட் இண்டீஸ்: ஹேம்ராஜ், கீரன் பவெல், ஷாய் ஹோப், ஹெட்மயர், சாமுவேல்ஸ், ரோவ்மன் பவெல், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பாபியான் ஆலென், ஆஷ்லே நர்ஸ், ஒபேட் மெக்கோய், கெமார் ரோச்.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்‌ஷன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8 மணிதினேஷ் கார்த்திக
2. இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி
‘இந்திய கிரிக்கெட் அணி விராட்கோலியை மட்டுமே நம்பி இல்லை’ என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.
3. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரர்களாக ரிஷாப் பான்ட், அம்பத்தி ராயுடு தேர்வு
இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் விராட்கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
டெல்லி, மும்பை இரு அணிகளும் ஒரே மாதிரியாக தலா 5 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன.
5. வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சர்வான் நியமனம்
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அயர்லாந்தில் நடைபெறும் 3 நாடுகள் ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.