முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்


முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
x
தினத்தந்தி 3 Nov 2018 11:15 PM GMT (Updated: 3 Nov 2018 7:35 PM GMT)

பெர்த்தில் இன்று நடக்கும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

பெர்த்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி குறுகிய கால சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று நடக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் செயல்பாடு மோசமாக இருந்து வருகிறது. அதுவும் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலியா மிகவும் பலவீனமாகி விட்டது. கடைசியாக மழை பாதிப்பின்றி முழுமையாக நடந்த 18 ஒரு நாள் போட்டிகளில் 16-ல் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்துள்ளது. தற்போது புதிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் எழுச்சி பெறும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் காயம் காரணமாக அம்லா, டுமினி இடம் பெறவில்லை. என்றாலும் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் அந்த அணி வலுவாகவே காணப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின், இந்த தொடரில் அசத்தினால் உலக கோப்பைக்கான அணியில் இடத்தை சிக்கலின்றி தக்க வைத்துக்கொள்ளலாம்.

இவ்விரு அணிகளும் இதுவரை 96 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 47-ல் ஆஸ்திரேலியாவும், 45-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் ‘டை’ ஆனது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஷான் மார்ஷ், கிறிஸ் லின், கிளைன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் காரி, மிட்செல் ஸ்டார்க் அல்லது நாதன் கவுல்டர்-நிலே, பேட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், எய்டன் மார்க்ராம், ரீஜா ஹென்ரிக்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டேவிட் மில்லர், பெஹர்டைன், பெலக்வாயோ அல்லது பிரிடோரியஸ், ஸ்டெயின், காஜிசோ ரபடா, நிகிடி, இம்ரான் தாஹிர்.

இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங் கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story