தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி படுதோல்வி


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி படுதோல்வி
x
தினத்தந்தி 4 Nov 2018 11:00 PM GMT (Updated: 4 Nov 2018 7:44 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 152 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி, உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய பணித்தது.

இதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. டாப்-3 வீரர்களான டிராவிஸ் ஹெட் (1 ரன்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் (5 ரன்), டார்சி ஷார்ட் (0) ஆகியோர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இந்த சரிவில் இருந்து மீள முடியாமல் ஊசலாடிய ஆஸ்திரேலியா 38.1 ஓவர்களில் 152 ரன்களில் சுருண்டது. சொந்த மண்ணில் அந்த அணியின் 5-வது குறைந்த ஸ்கோர் இதுவாகும். அதிகபட்சமாக நாதன் கவுல்டர் நிலே 34 ரன்களும், அலெக்ஸ் காரி 33 ரன்களும் எடுத்தனர். அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லும் (11 ரன்) ஏமாற்றம் அளித்தார். தென்ஆப்பிரிக்கா தரப்பில் பெலக்வாயோ 3 விக்கெட்டுகளும், ஸ்டெயின், நிகிடி, இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணிக்கு விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கும் (47 ரன்), ரீஜா ஹென்ரிக்சும் (44 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். மார்க்ராமும் (36 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்ததால் வெற்றி எளிதானது. தென்ஆப்பிரிக்க அணி 29.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் பிளிஸ்சிஸ் 10 ரன்னும் (நாட்-அவுட்), ஹென்ரிச் கிளாசென் 2 ரன்னும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

ஆஸ்திரேலிய அணி இந்த ஆண்டில் இதுவரை விளையாடியுள்ள 11 ஒரு நாள் போட்டிகளில் 10-ல் தோல்வி அடைந்துள்ளது. அந்த வகையில் இது தான் அவர்களுக்கு மோசமான ஆண்டாக அமைந்திருக்கிறது. அத்துடன் தொடர்ச்சியாக 7 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. தொடர்ச்சியாக அந்த அணி சந்தித்த அதிக தோல்விகள் இது தான். இதற்கு முன்பு 1996-ம் ஆண்டு தொடர்ந்து 6 ஆட்டங்களில் தோற்றதே மோசமானதாக இருந்தது.

தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் திறமைக்கு ஏற்ப ஆடவில்லை. அதே சமயம் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. இந்த போட்டியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற்றம் காண்பதற்கு இது அருமையான வாய்ப்பாகும். அடுத்த ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு வருவோம்’ என்றார்.

தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் கூறுகையில், ‘பந்து வீச்சு மற்றும் பீல்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டோம். எல்லாமே சரியாக அமைந்தது. ஸ்டெயின் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது சிறப்பான விஷயம். பேட்டிங்கில் இன்னும் நேர்த்தியுடன் செயல்பட்டிருக்கலாம். 8 அல்லது 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என்றார். 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 9-ந்தேதி அடிலெய்டில் நடக்கிறது.


Next Story