20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றுமா?


20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்றுமா?
x
தினத்தந்தி 5 Nov 2018 11:30 PM GMT (Updated: 5 Nov 2018 8:59 PM GMT)

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று இரவு நடக்கிறது.

லக்னோ,

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் புதிதாக கட்டப்பட்டுள்ள எகனா ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது. இந்த மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

கொல்கத்தாவில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. 109 ரன்னுக்குள் வெஸ்ட்இண்டீஸ் அணியை கட்டுப்படுத்தியது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். அறிமுக வீரர்களாக களம் கண்ட குருணல் பாண்ட்யா, கலீல் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை சாய்த்ததுடன் கட்டுக்கோப்புடன் பந்து வீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.

பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, ரிஷாப் பான்ட் ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். தினேஷ் கார்த்திக் (31 ரன்கள்), குருணல் பாண்ட்யா (21 ரன்கள்) கடைசி வரை நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து போட்டி தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் ரோகித் சர்மா 11 ரன்கள் சேர்த்தால் சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற பெருமைக்குரிய விராட்கோலியை (2,102 ரன்கள்) முந்துவதுடன், சர்வதேச அளவில் அதிக ரன்கள் குவித்த 4-வது வீரர் என்ற பெருமையையும் பெறுவார். அவர் இந்த சாதனையை படைப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

உலக சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி கடந்த ஆட்டத்தில் பேட்டிங்கில் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான பொல்லார்ட், டேரன் பிராவோ, ஹெட்மயர் ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறியது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் காயம் இன்னும் குணமடையாததால் அவர் இந்த போட்டி தொடரில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகும்.

கேப்டன் பிராத்வெய்ட் பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்து வீச்சில் அசத்தி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதேபோல் அறிமுக வீரர்களாக இடம் பெற்ற ஒஷானே தாமஸ் (2 விக்கெட்), காரி பியாரே (ஒரு விக்கெட்) ஆகியோர் கச்சிதமாக பந்து வீசி கலக்கினார்கள்.

இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தால், டெஸ்ட் (0-2) மற்றும் ஒருநாள் போட்டி தொடரை (1-3) இழந்தது போல் 20 ஓவர் போட்டி தொடரையும் இழக்க நேரிடும் என்பதால் வெஸ்ட்இண்டீஸ் அணி இந்த போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடும். சரிவில் இருந்து மீண்டு வரக்கூடிய சக்தி வாய்ந்த அனுபவமும், துடிப்பும் மிக்க வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வெற்றியை அளிக்க இந்திய அணியினர் வரிந்து கட்டுவார்கள். இதனால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை ஒன்பது 20 ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 3 ஆட்டத்தில் இந்தியாவும், 5 ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ரிஷாப் பான்ட், குருணல் பாண்ட்யா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது.

வெஸ்ட் இண்டீஸ்:
ஷாய் ஹோப், தினேஷ் ராம்டின், ஹெட்மயர், கீரன் பொல்லார்ட், டேரன் பிராவோ, ரோவ்மன் பவெல், கார்லஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), பாபியான் ஆலென், கீமோ பால், காரி பியாரே, ஒஷானே தாமஸ்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ் சேனல் ஆகியவை நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story