வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: உமேஷ் யாதவ், பும்ரா, குல்தீப் யாதவுக்கு ஓய்வு


வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: உமேஷ் யாதவ், பும்ரா, குல்தீப் யாதவுக்கு ஓய்வு
x
தினத்தந்தி 9 Nov 2018 10:00 PM GMT (Updated: 9 Nov 2018 8:22 PM GMT)

இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

புதுடெல்லி, 

இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இரு அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வருகிற 21–ந் தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய தொடருக்கு 3 பந்து வீச்சாளர்களும் சிறந்த உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார். 

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுலை தேர்வு குழுவினர் தேர்வு செய்து அறிவித்துள்ளனர். பஞ்சாபை சேர்ந்த 28 வயதான சித்தார்த் கவுல் கடந்த ஜூன் மாதம் நடந்த அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் அறிமுக வீரராக இந்திய அணியில் இடம் பிடித்தார். அதன் பிறகு தற்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் சென்னையை சேர்ந்த ஆல்–ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் களம் காண வாய்ப்பு உள்ளது.


Next Story