கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சென்னையில் இன்று மோதல்


கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சென்னையில் இன்று மோதல்
x
தினத்தந்தி 10 Nov 2018 10:30 PM GMT (Updated: 10 Nov 2018 8:37 PM GMT)

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது.

சென்னை, 

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது.

கடைசி ஆட்டம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இந்திய பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் முறையே 5 விக்கெட் மற்றும் 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரையும் இழந்து விட்டது. இந்த நிலையில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது.

தீபாவளியை கொண்டாடி விட்டு நேற்று சென்னைக்கு வந்தடைந்த இந்திய வீரர்கள் வலை பயிற்சி எதிலும் ஈடுபடவில்லை. ஆனாலும் இந்திய வீரர்கள் தொடரை முழுமையாக வசப்படுத்தும் முழு உத்வேகத்துடன் இருக்கிறார்கள். முந்தைய ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தினார். அவருடன் இணைந்து ஷிகர் தவானும் நல்ல தொடக்கம் தந்தார். இன்றைய ஆட்டத்திலும் அது போன்று தொடக்கம் அமைந்தால் பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.

தொடரை ஏற்கனவே வென்று விட்டதால் இந்திய அணியில் உமேஷ் யாதவ், பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

ராம்டின் கருத்து

தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியுடன் தாயகம் திரும்ப முயற்சிக்கும். பொதுவாக 20 ஓவர் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் மிரட்டுவார்கள். ஆனால் அதிரடி மன்னர்கள் ரஸ்செல், கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ், மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் உள்ளிட்டோர் இல்லாததால் தற்போது அந்த அணி தடுமாறிக்கொண்டிருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ராம்டின் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘எங்களது 20 ஓவர் போட்டி அணி வீரர்களுக்கு உலகம் முழுவதும் கிராக்கி இருக்கிறது. அது தான் எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. எங்களது மூத்த வீரர்கள் இந்த தொடரில் விளையாட வரவில்லை. முதல் இரண்டு ஆட்டங்களில் நாங்கள் தோற்றதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். 20 ஓவர் கிரிக்கெட்டில் உலக சாம்பியனாக இருந்து கொண்டு விளையாடி வரும் விதம் ஏமாற்றம் அளிக்கிறது. கை மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி சுழற்பந்து வீசும் குல்தீப் யாதவின் பந்து வீச்சை எங்களது பேட்ஸ்மேன்களால் திறம்பட சமாளிக்க முடியவில்லை. மிடில் ஓவர்களில் அவர் அச்சுறுத்துலாக விளங்கினார்’ என்றார்.

சேப்பாக்கம் எப்படி?

சேப்பாக்கம் ஆடுகளம் எப்போதும் வேகம் குறைந்து சுழற்பந்து வீச்சுக்கு உதவிகரமாக இருக்கும். இன்றைய ஆட்டத்திலும் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று ராம்டின் குறிப்பிட்டார். சென்னை சேப்பாக்கத்தில் சர்வதேச 20 ஓவர் போட்டி நடப்பது இது 2–வது முறையாகும். ஏற்கனவே 2012–ம் ஆண்டு இங்கு நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து இருந்தது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கேறுவதால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதே சமயம் கேப்டன் விராட் கோலி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஆகியோர் இல்லாதது சற்று ஏமாற்றமே. விதிமீறல் பிரச்சினை காரணமாக வழக்கம் போல் ஐ, ஜே, கே ஆகிய மூன்று கேலரிகளில் 12 ஆயிரம் இருக்கைகள் காலியாகவே இருக்கும்.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், ரிஷாப் பான்ட், மனிஷ் பாண்டே அல்லது ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், குருணல் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், கலீல் அகமது.

வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், டேரன் பிராவோ, பொல்லார்ட், கார்லஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), ரோவ்மன் பவெல், கீமோ பால், பாபியான் ஆலென், காரி பியாரே, ஒஷானே தாமஸ்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story