பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை 46 ரன்னில் சுருட்டி வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி


பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை 46 ரன்னில் சுருட்டி வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 10 Nov 2018 10:15 PM GMT (Updated: 10 Nov 2018 8:40 PM GMT)

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை 46 ரன்னில் சுருட்டிய வெஸ்ட்இண்டீஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்

கயானா, 

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை 46 ரன்னில் சுருட்டிய வெஸ்ட்இண்டீஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்

பெண்களுக்கான 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று ஆட்டம் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

புரோவிடென்சில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கைசியா நைட் 32 ரன்னும், கேப்டன் டெய்லர் 29 ரன்னும் எடுத்தனர். வங்காளதேச அணி தரப்பில் ஜஹனரா ஆலம் 3 விக்கெட்டும், ருமனா அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

வெஸ்ட்இண்டீஸ் அபார வெற்றி

பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி, வெஸ்ட்இண்டீஸ் வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 14.4 ஓவர்களில் 46 ரன்னில் சுருண்டது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேச அணி எடுத்த ரன்கள் பெண்கள் உலக கோப்பை போட்டியில் குறைந்தபட்ச ஸ்கோராக பதிவானது. ஒரு வீராங்கனை கூட இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.

வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டோட்டின் 3.4 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டனுடன் 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சர்வதேச பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இது 3–வது சிறப்பான பந்து வீச்சாகும். உலக கோப்பை போட்டியில் சிறந்த பந்து வீச்சு இது தான். டோட்டின் ஆட்டநாயகி விருது பெற்றார்.

பாகிஸ்தான் தோல்வி

புரோவிடென்சில் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அலிசா ஹீலி 48 ரன்னும், பெத் மூனி 48 ரன்னும், கேப்டன் மெக் லானிங் 41 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் நாஷ்ரா சாந்து, அலியா ரியாஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதனை அடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிஸ்மா மாரூப் 26 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மெகன் ஷூட், ஜார்ஜியா வார்ஹம் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி ஆட்டநாயகி விருது பெற்றார்.


Next Story