இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ‘போட்டி தொடரை முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ - வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் கருத்து


இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ‘போட்டி தொடரை முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ - வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் கருத்து
x
தினத்தந்தி 12 Nov 2018 11:30 PM GMT (Updated: 12 Nov 2018 9:40 PM GMT)

‘இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரை நாங்கள் முழுமையாக இழந்தது மோசமானதாகும்’ என்று வெஸ்ட்இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெய்ட் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. டேரன் பிராவோ 43 ரன்னும், நிகோலஸ் பூரன் 53 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டியது. வெற்றிக்கான கடைசி ரன்னை மனிஷ் பாண்டே அடித்தார். 3-வது விக்கெட்டுக்கு ஷிகர் தவான் (92 ரன்கள்), ரிஷாப் பாண்ட் (58 ரன்கள்) ஜோடி 130 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதையும், குல்தீப் யாதவ் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆஸ்திரேலியா தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த போட்டியில் ஷிகர் தவான் சிறப்பான ரன் குவித்து பார்முக்கு திரும்பி இருப்பது முக்கியமானதாகும். இது அணிக்கு நல்ல விஷயமாகும். முதல் 6 ஓவர்களுக்குள் நாங்கள் 2 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியை சந்தித்தாலும், ஷிகர் தவான், ரிஷாப் பாண்ட் ஆகியோர் அதனை திறம்பட கையாண்டு போட்டியை வெல்லக்கூடிய பார்ட்னர்ஷிப்பை அமைத்து கொடுத்தனர்.

இந்த போட்டி தொடர் வெற்றி வீரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். ஆஸ்திரேலிய போட்டி தொடர் வித்தியாசமானது. ஆஸ்திரேலிய போட்டி தொடர் எப்பொழுதும் வீரர்களின் திறமை மற்றும் அணியின் திறனை சோதிப்பதாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கும். இந்த போட்டி தொடரில் நமது அணியின் பீல்டிங் நல்ல முன்னேற்றம் கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சில குறைபாடுகள் இருந்தாலும், சில சிறப்பான செயல்பாடுகளும் வெளிப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர் குறித்து தற்போது நான் அதிகம் சிந்திக்கவில்லை. முதலில் 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. 20 ஓவர் போட்டிக்கு முதலில் தயாராக வேண்டும். டெஸ்ட் போட்டி குறித்து சிந்திக்க இன்னும் போதிய கால அவகாசம் இருக்கிறது. இந்த தொடரில் அணியாக நாம் சிறப்பாக செயல்பட்டது போல் ஆஸ்திரேலிய தொடரிலும் நன்றாக செயல்பட முடியும்.

குர்ணல் பாண்ட்யா போன்று அச்சம் இல்லாமல் விளையாடும் வீரர்களால் இந்திய அணிக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. அவர், அவருடையை சகோதரர் ஹர்திக் பாண்ட்யா போல் எல்லா சூழ்நிலையிலும் பயமின்றி செயல்படுகிறார். குர்ணல் பாண்ட்யாவிடம் இருக்கும் அபார திறமையால் அவர் அணியில் நீண்ட நாட்கள் இடம் பிடிப்பார். டோனி போன்ற வீரர் இல்லை என்பது எந்தவொரு அணிக்கும் பெரிய இழப்பாகும். டோனி அணியில் இடம் பெறுவது குறிப்பாக இளம் வீரர்களுக்கு பெரிய ஊக்கம் அளிக்கக்கூடியதாகும் என்று ரோகித் சர்மா கூறினார்.

தோல்வி குறித்து வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் கார்லோஸ் பிராத்வெய்ட் கருத்து தெரிவிக்கையில், ‘20 ஓவர் போட்டி தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது மோசமானதாகும். கேப்டன் என்ற முறையில் இந்த தோல்வி எனக்கு தர்மசங்கடத்தை அளிக்கிறது. குறுகிய வடிவிலான இந்த போட்டி தொடரில் நாங்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். முதல் ஆட்டத்தில் எங்களது பந்து வீச்சில் நம்பிக்கையுடன் போராடினோம்.

2-வது ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. கடைசி ஆட்டத்தில் நாங்கள் பேட்டிங்கில் அசத்தினோம். ஷிகர் தவான்-ரிஷாப் பாண்ட் பார்ட்னர் ஷிப் வெற்றியை எங்களிடம் இருந்து பறித்தது. இருப்பினும் நாங்கள் கடைசி பந்து வரை வெற்றிக்காக போராடினோம். நிகோலஸ் பூரன் அதிரடியாக பேட்டிங் செய்தார். எங்கள் அணியில் 3 முதல் 4 மேட்ச்வின்னர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். கடைசி போட்டியில் எங்களது தொடக்க ஆட்டக்காரர்கள் 6 ஓவர்களுக்குள் 50 ரன்களை கடந்து நல்ல தொடக்கம் அளித்தனர்.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் நல்ல ஆட்டத்தை அளித்தனர். 18-வது ஓவரில் ரிஷாப் பாண்ட்க்கு, நான் வீசிய பந்து அவர் நின்று விளையாடி இருந்தால் காலில் தான் பட்டு இருக்கும். அவர் துள்ளியதால் நடுவர் தவறாக கணித்து அந்த பந்தை ‘வைடு’ என்று அறிவித்தார். அந்த பந்தை ‘வைடு’ என்று அறிவிக்காமல் இருந்தால் நாங்கள் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. அந்த முடிவு எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது’ என்று தெரிவித்தார்.

Next Story