ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்: ஐதராபாத் அணி 523 ரன்கள் குவிப்பு


ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்: ஐதராபாத் அணி 523 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 13 Nov 2018 10:45 PM GMT (Updated: 13 Nov 2018 8:31 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 523 ரன்கள் குவித்தது. அக்‌ஷாத் ரெட்டி இரட்டை சதம் அடித்தார்.

நெல்லை,

37 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு-ஐதராபாத் (பி பிரிவு) இடையிலான லீக் ஆட்டம் நெல்லையில் நடந்து வருகிறது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பேட்டிங்கில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஐதராபாத் அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 523 ரன்கள் குவித்துள்ளது. தமிழக கேப்டன் பாபா இந்திரஜித் 8 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் ஐதராபாத்தின் ரன்வேட்டையை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனும் அக்‌ஷாத் ரெட்டி 248 ரன்களுடன் (477 பந்து, 22 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் அக்‌ஷாத் ரெட்டி இரட்டை செஞ்சுரி அடிப்பது இதுவே முதல் முறையாகும். அவருக்கு ஒத்துழைப்பு தந்த பவனகா சந்தீப் 130 ரன்களிலும், சாய்ராம் 42 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.

ரோட்டாக்கில் நடந்த ஜார்கண்ட் - அரியானா அணிகள் இடையிலான (சி பிரிவு) ஆட்டம் 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே அரியானா 81 ரன்னிலும், ஜார்கண்ட் 143 ரன்னிலும் சுருண்டன. 62 ரன்கள் பின்தங்கிய அரியானா 2-வது இன்னிங்சில் 72 ரன்னில் முடங்கியது. வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 11 ரன் இலக்கை ஜார்கண்ட் அணி 4 ஓவர்களில் எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜ்கோட்டில் நடந்து வரும் பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 344 ரன்கள் சேர்த்து 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தனது 10-வது முதல்தர போட்டி சதத்தை எட்டிய ரவீந்திர ஜடேஜா 178 ரன்கள் (326 பந்து, 16 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டம் இழக்காமல் இருக்கிறார்.

புதுச்சேரியில் நடந்து வரும் மேகலாயாவுக்கு (பிளேட் பிரிவு) எதிரான லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான புதுச்சேரி முதல் இன்னிங்சில் 389 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. கேப்டன் டி.ரோகித் (130 ரன்), பராஸ் டோக்ரா (101 ரன்) சதம் அடித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய மேகலாயா அணி நேற்றைய முடிவில் 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.

திமாபுரில் நடக்கும் நாகலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிக்கிம் அணி முதல் இன்னிங்சில் 374 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. தொடர்ந்து 2-வது இரட்டை சதத்தை ருசித்த மிலின்ட் குமார் 224 ரன்கள் (215 பந்து, 31 பவுண்டரி, 3 சிக்சர்) நொறுக்கினார். அடுத்து 195 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய நாகலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 97 ரன்களுடன் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்து வரும் மத்திய பிரதேசத்துக்கு எதிரான மோதலில் (பி பிரிவு) பெங்கால் அணி, கேப்டன் மனோஜ் திவாரியின் (201 ரன்) இரட்டை சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்டுக்கு 510 ரன்கள் திரட்டி ‘டிக்ளேர்’ செய்தது.


Next Story