20 ஓவர் போட்டி: அதிக ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் பட்டியலில் மித்தாலி ராஜ் முதலிடம்


20 ஓவர் போட்டி: அதிக ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் பட்டியலில் மித்தாலி ராஜ் முதலிடம்
x
தினத்தந்தி 16 Nov 2018 11:59 AM GMT (Updated: 16 Nov 2018 11:59 AM GMT)

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை தாண்டி மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.

புதுடெல்லி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மித்தாலி ராஜ், பெண்கள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்துள்ளார். சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரிலும், இந்திய அணியை இறுதிப்போட்டி வரை  கொண்டுச் சென்றதில் இவரின் பங்கு அளப்பரியது. இந்த உலகக் கோப்பைத் தொடரின்போதும் அவர் புரிந்த மகத்தான சாதனைகளுக்காகப் பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை முந்தி மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்து சாதனை புரிந்து உள்ளார்.

வெஸ்ட்இண்டீசில் ஐசிசி மகளிர் 20  ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி ஏற்கெனவே பாகிஸ்தான்,  நியூஸிலாந்தை வென்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக அயர்லாந்தை இந்தியா வென்றுள்ளது. மித்தாலி ராஜ் 1 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்தார். இது அவருடைய 17-வது அரை சதம்.

இதன்மூலம் டி20 ஆட்டங்களில் அதிக ரன்கள் குவித்த இந்தியர் என்ற சிறப்பையும் மித்தாலி பெற்றுள்ளார். இதுவரை அவர் 80 இன்னிங்ஸில் 2283 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு இந்திய ஆடவர், மகளிர் என இரு தரப்பிலும் 2207 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார் ரோஹித் சர்மா. 2102 ரன்களுடன் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார் கோலி.

ஆடவர் தரப்பில் நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் 73 இன்னிங்ஸில் 2271 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதனையும் தற்போது தாண்டியுள்ளார் மிதாலி ராஜ். ஆடவர் தரப்பில் 2207 ரன்களுடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்திலும் சோயிப் மாலிக் 2190 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்கள்.

எனினும் மகளிர் 20 ஓவர்  கிரிக்கெட்டில் நியூஸிலாந்தின் சூஸி பேட்ஸ் 2996 ரன்களும், மே.இ. அணியின் ஸ்டெபினி டெய்லர் 2691 ரன்களும் எடுத்து முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளார்கள். அந்த இலக்கை அடைய குறைந்தது இன்னும் 20 ஆட்டங்களிலாவது விளையாடவேண்டும்.

இந்திய அளவில்...

மித்தாலி ராஜ் 2283

ரோஹித் சர்மா 2207

வீராட் கோலி 2102

ஹர்மன் பிரித் கவுர் 1827

சுரேஷ் ரெய்னா 1605

டோனி 1487

Next Story