பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து 153 ரன்னில் சுருண்டது


பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து 153 ரன்னில் சுருண்டது
x
தினத்தந்தி 16 Nov 2018 10:15 PM GMT (Updated: 16 Nov 2018 7:17 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து 153 ரன்னில் சுருண்டது.

அபுதாபி,

பாகிஸ்தான்-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 66.3 ஓவர்களில் 153 ரன்னில் சுருண்டது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்களுடன் ஓரளவு நல்ல நிலையில் இருந்த நியூசிலாந்து அணி மேற்கொண்டு 42 ரன்கள் எடுப்பதற்குள் எஞ்சிய 7 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து விட்டது. கேப்டன் கனே வில்லியம்சன் (63 ரன்) தவிர வேறு யாரும் அந்த அணியில் ஜொலிக்கவில்லை. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளும், முகமது அப்பாஸ், ஹசன் அலி, ஹாரிஸ் சோகைல் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி நேற்றைய முடிவில் இமாம் உல்-ஹக் (6 ரன்), முகமது ஹபீஸ் (20 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் எடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Next Story