அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி 467 ரன்கள் குவித்து டிக்ளேர்


அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி 467 ரன்கள் குவித்து டிக்ளேர்
x
தினத்தந்தி 17 Nov 2018 10:30 PM GMT (Updated: 17 Nov 2018 7:30 PM GMT)

அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய ‘ஏ’ அணி 467 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

மவுன்ட் மாங்கானு,

இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற முதலாவது டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) மவுன்ட் மாங்கானுவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. பிரித்வி ஷா (62 ரன்), மயங்க் அகர்வால் (65 ரன்), ஹனுமா விஹாரி (86 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தனர். விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் 79 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருத்தார்.

நேற்று 2-வது ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய பார்த்தீவ் பட்டேல் 94 ரன்னிலும், விஜய் சங்கர் 62 ரன்னிலும், கிருஷ்ணப்பா கவுதம் 47 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்திய ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 122.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தீபக் சாஹர் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார். நியூசிலாந்து ‘ஏ’ அணி தரப்பில் டிக்னெர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் வில் யங் 49 ரன்னில் கிருஷ்ணப்பா கவுதம் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். நிலைத்து நின்று ஆடிய ரூதர்போர்ட் சதம் அடித்தார். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ரூதர்போர்ட் 106 ரன்னுடனும், டிம் சிபெர்ட் 13 ரன்னுடனும் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Next Story