கிரிக்கெட்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி + "||" + Women's 20 World Cup Cricket: West Indies and England qualify for semi-finals

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

செயின்ட் லூசியாவில் நேற்று முன்தினம் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி, இலங்கையை எதிர்கொண்டது.


‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஹாலே மேத்யூஸ் (62 ரன்கள், 36 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), டோட்டின் (49 ரன்கள், 35 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) ஆகியோர் அதிரடியாக ஆடி நல்ல அடித்தளம் அமைத்தனர். அடுத்து வந்த கேப்டன் ஸ்டெபானி டெய்லர் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 41 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.

பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் 104 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் சமாரி அதப்பட்டு 44 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் ஹாலே மேத்யூஸ் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், ஆட்டநாயகி விருதையும் பெற்றார்.

தொடர்ச்சியாக 3-வது வெற்றியை ருசித்த வெஸ்ட்இண்டீஸ் அணி அரைஇறுதிக்கு முன்னேறியது. இலங்கை அணி 4 ஆட்டத்தில் ஆடி ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் (இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது) 3 புள்ளிகள் பெற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

‘ஏ’ பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 19.3 ஓவர்களில் 85 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஷோலே டிரையோன் 27 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் நடாலி சிவேர், அன்யா சிரப்சோல் தலா 3 விக்கெட்டும், கிறிஸ்டி கோர்டான் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். அன்யா சிரப்சோல் கடைசி ஓவரில் முதல் 3 பந்துகளில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை சாய்த்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

இதைத்தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டேனிலே வியாட் 27 ரன்னும், தம்சின் பீமான்ட் 24 ரன்னும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் டானே வான் நிகெர்க் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இங்கிலாந்து வீராங்கனை நடாலி சிவேர் ஆட்டநாயகி விருது பெற்றார்.

3-வது ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்து அணி 2 வெற்றி, ஒரு முடிவில்லையுடன் 5 புள்ளிகள் பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. 3 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 2 தோல்வி கண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்தது. ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அரைஇறுதிக்கு முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.