நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெற்றியை நோக்கி பாகிஸ்தான்


நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெற்றியை நோக்கி பாகிஸ்தான்
x
தினத்தந்தி 18 Nov 2018 10:30 PM GMT (Updated: 18 Nov 2018 7:21 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

அபுதாபி,

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 153 ரன்களும், பாகிஸ்தான் 227 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 100.4 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஹென்றி நிகோல்ஸ் (55 ரன்), வாட்லிங் (59 ரன்) அரைசதம் அடித்தனர். அந்த அணி கடைசி 29 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா தலா 5 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 176 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி நேற்றைய முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 139 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் இந்த டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story