கிரிக்கெட்

இலங்கை மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து + "||" + After 17 years in the soil of Sri Lanka, England won the Test series

இலங்கை மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

இலங்கை மண்ணில் 17 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
பல்லகெலே,

இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 290 ரன்களும், இலங்கை 336 ரன்களும் எடுத்தன. 46 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் கேப்டன் ஜோ ரூட்டின் சதத்தின் உதவியுடன் 346 ரன்கள் குவித்தது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 301 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்திருந்தது. மேத்யூஸ் 88 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனதும் இலங்கையின் நம்பிக்கையும் தளர்ந்து போனது.

இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் அடுத்த 9 ஓவர்களுக்குள் பறிகொடுத்து ‘சரண்’ அடைந்தது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 35 ரன்னிலும், பொறுப்பு கேப்டன் சுரங்கா லக்மல் ரன் ஏதுமின்றியும், புஷ்பகுமாரா ஒரு ரன்னிலும் வீழ்ந்தனர். ஆடுகளம் சுழலின் சொர்க்கமாக திகழ்ந்ததால் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஜாக் லீச், மொயீன் அலி, அடில் ரஷித் ஆகியோர் விரித்த சுழல் வலையில் இலங்கை வீரர்கள் முழுமையாக சிக்கிக் கொண்டனர்.

இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 74 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாக் லீச் 5 விக்கெட்டுகளும், மொயீன் அலி 4 விக்கெட்டுகளும், அடில் ரஷித் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. ஏற்கனவே முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இலங்கை மண்ணில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை வெல்வது கடந்த 17 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2001-ம் ஆண்டு நாசர் ஹூசைன் தலைமையிலான இங்கிலாந்து அணி இலங்கையில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து வசப்படுத்திய முதல் வெளிநாட்டு தொடரும் இது தான்.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி கொழும்பில் தொடங்குகிறது.

சுழல் ஜாலத்தில் புதிய சாதனை

* இந்த டெஸ்டில் இரு அணிகளின் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 38 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களே அறுவடை செய்துள்ளனர். 141 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய போட்டியாக இது பதிவானது. இதற்கு முன்பு 1969-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த இந்தியா-நியூசிலாந்து இடையிலான டெஸ்டில் 37 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் சாய்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

* இந்த டெஸ்டில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் ஜாக் லீச், மொயீன் அலி, அடில் ரஷித், ஜோ ரூட் 4 பேரும் இணைந்து எதிரணியின் 19 விக்கெட்டுகளை அள்ளினர். ஒரு வீரர் மட்டும் ரன்-அவுட் ஆனார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட்டும் எடுக்காமல் அந்த அணி வெற்றி காண்பது இது 3-வது நிகழ்வாகும். 1956-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 1952-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராகவும் அந்த அணி இவ்வாறு வெற்றி கண்டிருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்துக்கு காலக்கெடு நீட்டிப்பு
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. இலங்கையில் விடுதலையான மீனவர்கள் பாம்பன் திரும்பினர்
இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பாம்பனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
3. இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி
இலங்கைக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
4. இலங்கை ஒரு நாள் போட்டி அணிக்கு கருணாரத்னே கேப்டன்?
இலங்கை ஒரு நாள் போட்டி அணிக்கு கருணாரத்னேவை கேப்டனாக நியமிப்பது குறித்து அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது.
5. இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி
இலங்கைக்கு எதிரான கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.