20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா அபார வெற்றி: “மந்தனாவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவது கடினம்” - ஆஸ்திரேலிய கேப்டன் லானிங்


20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா அபார வெற்றி: “மந்தனாவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவது கடினம்” - ஆஸ்திரேலிய கேப்டன் லானிங்
x
தினத்தந்தி 18 Nov 2018 11:15 PM GMT (Updated: 18 Nov 2018 7:45 PM GMT)

இந்திய வீராங்கனை மந்தனாவின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவது கடினம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் லானிங் கூறியுள்ளார்.

கயானா,

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை நேற்று முன்தினம் எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்திய துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 83 ரன்களும் (9 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 43 ரன்களும் விளாசினர். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 119 ரன்களில் சுருண்டது.

இதன் மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடிய இந்திய அணி தனது பிரிவில் தோல்வியையே சந்திக்காமல் கம்பீரமாக முதலிடத்தை (4 வெற்றியுடன் 8 புள்ளி) பிடித்தது. இந்திய அணி அரைஇறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அல்லது இங்கிலாந்து ஆகிய அணிகளில் ஒன்றை சந்திக்கும். இந்தியாவுக்கான அரை இறுதி ஆட்டம் வருகிற 23-ந்தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு நடக்க உள்ளது.

இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய வீராங்கனை மந்தனா 20 ஓவர் போட்டிகளில் ஆயிரம் ரன்களை (49 இன்னிங்சில் 1,012 ரன்) கடந்த 3-வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். ஆட்டநாயகி விருதுபெற்ற 22 வயதான மந்தனா கூறுகையில், ‘முதல் 3 ஆட்டங்களில் நான் நல்ல தொடக்கம் கண்டும், அதை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் போனது ஏமாற்றம் அளித்தது. அதனால் இந்த ஆட்டத்தில் கணிசமான ரன்கள் குவிக்க வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கினேன். அதே போலவே அரைசதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதெல்லாம் பந்து எனது காலுறையில் படுகிறதோ அப்போதெல்லாம் எல்.பி.டபிள்யூ. என்று நினைப்பது உண்டு. அது ஏன் என்பது எனக்கு தெரியவில்லை.

நடுவர் எல்.பி.டபிள்யூ. (62 ரன்னில் இருந்த போது) வழங்கியதும், எதிர்முனையில் நின்ற வேதா கிருஷ்ணமூர்த்தி டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்யும்படி யோசனை கூறினார். அதனால் தான் அப்பீல் செய்து அவுட்டில் இருந்து தப்பித்ததுடன், அணிக்காக ஜோடியாக 20-30 ரன்கள் கூடுதலாக எடுக்க முடிந்தது. அவருக்கு எனது நன்றி. இந்த ஆட்டத்தில் எங்களது பந்து வீச்சும், பீல்டிங்கும் கனகச்சிதமாக அமைந்தது. இந்த தொடரில் பந்து வீச்சு, பீல்டிங் சிறப்பாக இருந்த ஆட்டம் இது தான். அந்த வகையில் இது சிறப்பு வாய்ந்த வெற்றியாகும்’ என்றார்.

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லானிங் கூறுகையில், ‘ஒரு கட்டத்தில் 200 ரன்கள் வரை ‘சேசிங்’ செய்ய வேண்டியது வரும் என்று நினைத்தோம். அந்த வகையில் இந்தியாவை கட்டுப்படுத்தியது திருப்தியே. 167 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்கு தான். உலக கோப்பையை வெல்ல விரும்பினால், இது போன்ற ஸ்கோரை விரட்டிப்பிடிக்க வேண்டும் என்பதை அறிவோம். இந்த ஆட்டத்தில் எங்களது திறமைக்கு ஏற்ப ஆடவில்லை.

இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும். எங்களது வீராங்கனைகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அடுத்த ஆட்டத்தில் எழுச்சி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். மந்தனாவின் பேட்டிங் வியப்புக்குரிய வகையில் இருந்தது. அவர் ஒரு அற்புதமான வீராங்கனை. நிலைத்து நின்று விளையாடத் தொடங்கி விட்டால், அவரை கட்டுப்படுத்துவது கடினம்.’ என்றார்.


Next Story