கிரிக்கெட்

‘ஆஸ்திரேலிய பந்து வீச்சு சவாலை சந்திக்க இந்திய பேட்ஸ்மேன்கள் தயார்’ - ரோகித் சர்மா + "||" + Indian batsmen ready to meet Australian bowling challenge ' - Rohit Sharma

‘ஆஸ்திரேலிய பந்து வீச்சு சவாலை சந்திக்க இந்திய பேட்ஸ்மேன்கள் தயார்’ - ரோகித் சர்மா

‘ஆஸ்திரேலிய பந்து வீச்சு சவாலை சந்திக்க இந்திய பேட்ஸ்மேன்கள் தயார்’ - ரோகித் சர்மா
‘ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு சவாலை சந்திக்க இந்திய பேட்ஸ்மேன்கள் தயாராக உள்ளனர்’ என்று இந்திய அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (புதன்கிழமை) இந்திய நேரப்படி பகல் 1.20 மணிக்கு பிரிஸ்பேனில் தொடங்குகிறது.


இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா பிரிஸ்பேனில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணி எப்பொழுதும் வேகமான ஆடுகளமான பெர்த், பிரிஸ்பேன் ஆகியவற்றில் விளையாடி இருக்கிறது. இந்த இரண்டு ஆடுகளங்களின் சூழ்நிலை சவால் நிறைந்ததாகும். ஆஸ்திரேலிய பவுலர்கள் உயரமானவர்கள். இந்த ஆடுகளங்களை அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார்கள். இந்திய பேட்ஸ்மேன்கள் அவர்களை போல் உயரமானவர்கள் கிடையாது. அதனால் இந்த ஆடுகளங்கள் நமது பேட்ஸ்மேன்களுக்கு எளிதானதல்ல. நமது வீரர்கள் இந்த முறை வரலாற்றை மாற்றி எழுதும் உறுதியுடன் இங்கு வந்துள்ளனர். நமது வீரர்கள் சவாலை சந்திக்க தயாராக உள்ளனர்.

நமது பேட்ஸ்மேன்களுக்கு சவால் காத்து இருக்கிறது. இருப்பினும் இந்திய அணியில் பலர் ஏற்கனவே இங்கு விளையாடி இருக்கிறார்கள். எனவே இங்குள்ள ஆடுகளத்தின் சூழ்நிலையை அறிந்தவர்கள். எந்த வடிவிலான போட்டியிலும் ஆஸ்திரேலிய பந்து வீச்சு சவால் அளிக்கும். ஆனாலும் சவாலுக்கு நாம் தயாராகவே வந்துள்ளோம்.

இந்தியாவுக்கு வெளியே பயணம் மேற்கொண்டு விளையாடுவது எப்பொழுதும் சிறப்பான உணர்வாகும். ஆஸ்திரேலிய மண்ணில் அணியாக சிறப்பாக செயல்பட்டு முத்திரை பதிக்க வேண்டும் என்பதே நமது நோக்கமாகும். கடந்த முறை நாம் இங்கு டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடினோம். 2 போட்டியில் தோல்வியை சந்தித்தோம். ஒரு போட்டியில் ‘டிரா’ செய்தோம். ஆனால் சில போட்டிகளில் நாம் நெருக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். குறிப்பாக பிரிஸ்பேன் டெஸ்டில் போட்டி மிகவும் நெருக்கமாக இருந்தது. இந்த முறை அணியாக நல்ல உணர்வுடன் இருக்கிறோம். எல்லா தருணங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற வேண்டும் என்பதே எங்கள் எண்ணமாகும்.

ஆஸ்திரேலியாவில் நன்றாக விளையாடினால் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக உணர்வோம். அடுத்த ஆண்டு உலக கோப்பை நடைபெற இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியா போன்ற நாட்டில் வெற்றி பெற்றால் நல்ல நம்பிக்கை கிடைக்கும். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது என்பது எப்பொழுதும் அபாயகரமானது என்பதில் சந்தேகமில்லை. இங்கு ஆடும் போது ஒரு அணியாக ஒருங்கிணைந்து எல்லோரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். சில வீரர்கள் மட்டும் ஆட்ட திறனை அதிகரிப்பது வெற்றிக்கு போதுமானதாக இருக்காது.

எங்களிடம் தரமான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். குறிப்பாக சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். நமது சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து சவால் அளிக்க முயற்சிப்போம். ஆஸ்திரேலிய அணியில் இன்னும் தரமான பேட்டிங் வரிசை உள்ளது. எனவே போட்டி தொடர் எப்படி போகிறது? என்பதை பார்ப்போம். இந்த முறை தனிச் சிறப்பாக செயல்பட்டு முந்தைய நிலைமையை மாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். அது எளிதான காரியமல்ல. ஆனாலும் எங்களிடம் தரமான வீரர்கள் உள்ளனர்.

இங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தபடி நம்மை மாற்றி கொண்டு செயல்படுவதற்கு ஏதுவாகவே முன்கூட்டியே இங்கு வந்துள்ளோம். குறுகிய வடிவிலான போட்டியில் நான் இங்கு சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். டெஸ்ட் போட்டியில் இங்கு ஆடுவது தான் சவாலானதாகும். தற்போது டெஸ்ட் பற்றி நான் சிந்திக்கவில்லை. 20 ஓவர் போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது குறித்து தான் சிந்தித்து வருகிறோம். சதம் அடிப்பது பற்றி நான் நினைக்கவில்லை. அணி என்னிடம் எதிர்பார்க்கும் ஆட்ட திறனை வெளிப்படுத்துவேன்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.