பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதல்


பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதல்
x
தினத்தந்தி 19 Nov 2018 11:30 PM GMT (Updated: 19 Nov 2018 10:01 PM GMT)

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியா-இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

செயின்ட் லூசியா,

பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 10 நாடுகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் லீக் ஆட்டத்தில் மோதின. நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

செயின்ட் லூசியாவில் நேற்று முன்தினம் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது.

‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, வெஸ்ட்இண்டீஸ் வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை வேகமாக இழந்தன. 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபியா டுங்லி 35 ரன்னும், அன்யா சிரப்சோல் 29 ரன்னும், டாமி பியாமான்ட் 23 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் டோட்டின், ஷாகேரா செல்மான் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

பின்னர் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 3 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தொடக்கம் கண்டாலும், டோட்டின் (46 ரன்கள்), ஷிமைன் கேம்ப்பெல் (45 ரன்கள்) ஆகியோர் 3-வது விக்கெட்டுக்கு நிலைத்து நின்று ஆடி அணி வெற்றிப் பாதையில் பயணிக்க வழிவகுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் அன்யா சிரப்சோல் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வெஸ்ட்இண்டீஸ் வீராங்கனை டோட்டின் ஆட்டநாயகி விருது பெற்றார்.

‘ஏ’ பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வங்காளதேச அணிகள் சந்தித்தன. சம்பிரதாயத்துக்கான இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்தது. தென்ஆப்பிரிக்க வீராங்கனை மரிஜானே காப் ஆட்டநாயகி விருதை கைப்பற்றினார்.

லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி எல்லா ஆட்டத்திலும் (4 ஆட்டம்) வெற்றி பெற்று முதலிடத்தையும், இங்கிலாந்து அணி 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 2-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. தென்ஆப்பிரிக்கா (2 வெற்றி, 2 தோல்வி) 3-வது இடமும், இலங்கை (ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை) 4-வது இடமும், வங்காளதேசம் எல்லா ஆட்டங்களிலும் தோல்வி கண்டு கடைசி இடமும் பெற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தன.

‘பி’ பிரிவில் இந்திய அணி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதலிடத்தையும், ஆஸ்திரேலிய அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடமும் பெற்று அரைஇறுதிக்குள் ஏற்கனவே நுழைந்துள்ளன. நியூசிலாந்து (2 வெற்றி, 2 தோல்வி) 3-வது இடமும், பாகிஸ்தான் (ஒரு வெற்றி, 3 தோல்வி) 4-வது இடமும், அயர்லாந்து எல்லா ஆட்டங்களிலும் தோல்வி கண்டு கடைசி இடமும் பெற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு ஆன்டிகுவாவில் நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. முன்னதாக 22-ந் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.


Next Story