ஆஸ்திரேலிய பயணத்தை வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது


ஆஸ்திரேலிய பயணத்தை வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 20 Nov 2018 10:30 PM GMT (Updated: 20 Nov 2018 8:35 PM GMT)

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது.

பிரிஸ்பேன், 

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடக்கிறது. கடினமான இந்த பயணத்தை இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

20 ஓவர் கிரிக்கெட்

டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேன் நகரில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசை புரட்டியெடுத்த இந்திய அணி அதே உற்சாகத்தோடு ஆஸ்திரேலியாவுக்கு பயணித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் சீதோஷ்ண நிலை மற்றும் ஆடுகளங்கள் நம் நாட்டுடன் ஒப்பிடும் போது முற்றிலும் வித்தியாசமானது என்பதால் அதற்கு ஏற்ப இந்திய வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சாதனையை நோக்கி ரோகித்

இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மனிஷ் பாண்டே, உமேஷ் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. பிரிஸ்பேன் ஆடுகளத்தில் பந்து அதிகமாக பவுன்ஸ் ஆகும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர் இருவர் தேவை இருக்காது. அதனால் யுஸ்வேந்திர சாஹல் ஆடும் லெவனில் இடம் பெறுவது சந்தேகம் தான். ரிஷாப் பான்ட் விக்கெட் கீப்பராக செயல்பட இருக்கிறார்.

பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக திகழும் இந்தியா, முதல் ஆட்டத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டும். சாதனையின் விளிம்பில் உள்ள இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா, இன்னும் 65 ரன்கள் எடுத்தால், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவரான நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலின் சாதனையை முறியடித்து விடுவார். அச்சாதனையை இந்த ஆட்டத்திலேயே செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. வேகப்பந்து வீச்சில் பும்ரா, புவனேஷ்வர்குமார், கலீல் அகமது மிரட்ட காத்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் பின்னடைவு

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடையை அனுபவித்து வரும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் மீதான தடையை முன்கூட்டியே நீக்கும் எண்ணம் இல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெளிவாக கூறி விட்டது. அவர்கள் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பின்னடைவு என்பதில் மாற்று கருத்து இல்லை.

சில மாதங்களாக ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் சீராக இல்லை. அந்த அணி கடைசியாக ஆடிய எட்டு 20 ஓவர் போட்டிகளில் 2–ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அவ்விரு வெற்றிகளும் சிறிய அணிகளுக்கு எதிராக (ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜிம்பாப்வே) பெற்றவை ஆகும். உள்ளூரில் ஆஸ்திரேலியா எப்போதும் சவால்மிக்கது என்றாலும் இது போன்ற பலவீனங்களை இந்திய அணி சாதகமாக பயன்படுத்தி கொண்டால் இந்த பயணத்தை வெற்றியுடன் தொடங்க முடியும். கடந்த முறை (2016–ம் ஆண்டு) இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் தொடரை 3–0 என்ற கணக்கில் முழுமையாக வென்று பிரமாதப்படுத்தியது. அதனால் இந்திய வீரர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய முன்னணி பவுலர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பிஞ்ச், மேக்ஸ்வெல், கிறிஸ் லின், ஸ்டோனிஸ், ஷார்ட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களை தான் அந்த அணி மலைபோல் நம்பி உள்ளது. இவர்கள் ஒருசேர ஜொலித்தால், ஆஸ்திரேலியா வலுவான ஸ்கோரை எட்ட முடியும்.

மைதானம் எப்படி?

பிரிஸ்பேனில் இதுவரை மூன்று 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 2–ல் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) வெற்றியும், ஒன்றில் தோல்வியும் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) கண்டுள்ளது. இந்திய அணி இங்கு 20 ஓவர் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைப்பது இதுவே முதல் முறையாகும்.

வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக எழும்பி (பவுன்ஸ்) செல்லும். இந்தியாவில் உள்ள மைதானத்தை காட்டிலும், பிரிஸ்பேன் மைதானம் மிகப்பெரியது. அதனால் அதிகமான சிக்சர்கள் அடிக்க முடியாது என்று ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் தனது பேட்டியின் போது குறிப்பிட்டார்.

இவ்விரு அணிகளும் இதுவரை 15 இருபது ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10–ல் இந்தியாவும், 5–ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி கண்டுள்ளன.

அணி வீரர்கள்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, லோகேஷ் ராகுல், ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டார்சி ஷார்ட், கிறிஸ் லின், கிளைன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பென் மெக்டெர்மோட், அலெக்ஸ் காரி, நாதன் கவுல்டர்–நிலே, ஆண்ட்ரூ டை, ஜாசன் பெரேன்டோர்ப், பில்லி ஸ்டான்லேக்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.20 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

‘இந்திய அணியில் அபாயகரமான வீரர்கள் உள்ளனர்’

‘‘அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 0–3 என்ற கணக்கில் இழந்தாலும், இந்த வடிவிலான போட்டியில் நாங்கள் இன்னும் சிறந்த அணி தான். மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம். மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணி நல்ல பார்மில் உள்ளது. அதனால் அவர்களுக்கு எதிராக ஆக்ரோ‌ஷமாக ஆடுவதுடன், வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த இந்த போட்டி அருமையான வாய்ப்பாக இருக்கும். அதை பயன்படுத்தி கொள்ள முயற்சிப்போம். இந்திய அணியில் எந்த வீரரையும் குறைத்து மதிப்பிட முடியாது. அபாயகரமான பல வீரர்கள் உள்ளனர். விராட் கோலி உலகின் தலைச்சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குகிறார். ரோகித் சர்மா, ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதங்கள் அடித்தவர். நிறைய 20 ஓவர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். விராட் கோலி மீது கொஞ்சம் கவனம் செலுத்துவோம் என்றாலும் அவர் மட்டுமே எங்களது இலக்கு அல்ல. ஏனெனில் மற்ற வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு தங்களுக்குரிய நாளாக அமைந்து விட்டால் எந்த அணியையும் சிதறடித்து விடுவார்கள்’’– ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச்

இந்தியா–ஆஸ்திரேலியா போட்டி அட்டவணை

தேதி போட்டி இடம் இந்திய நேரம்

நவ.21 முதலாவது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேன் பிற்பகல் 1.20 மணி

நவ.23 2–வது 20 ஓவர் போட்டி மெல்போர்ன் பிற்பகல் 1.20 மணி

நவ.25 3–வது 20 ஓவர் போட்டி சிட்னி பிற்பகல் 1.20 மணி

டிச.6–10 முதலாவது டெஸ்ட் அடிலெய்டு அதிகாலை 5.30 மணி

டிச.14–18 2–வது டெஸ்ட் பெர்த் காலை 7.50 மணி

டிச.26–30 3–வது டெஸ்ட் மெல்போர்ன் அதிகாலை 5.00 மணி

ஜன.3–7 4–வது டெஸ்ட் சிட்னி அதிகாலை 5 மணி

ஜன.12 முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னி காலை 7.50 மணி

ஜன.15 2–வது ஒரு நாள் போட்டி அடிலெய்டு காலை 8.50 மணி

ஜன.18 3–வது ஒரு நாள் போட்டி மெல்போர்ன் காலை 7.50 மணி

‘சீண்டினால் பதிலடி கொடுப்போம்’

‘‘ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார் இருவரும் அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்கள். நன்கு சிந்தித்து செயல்படுவார்கள். போட்டியின் தன்மை, பேட்ஸ்மேன் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப பந்து வீசக்கூடியவர்கள். இது தான் அவர்களின் பலமும். எந்த ஒரு கேப்டனும் அவர்கள் போன்ற பவுலர்கள் தங்கள் அணியில் இருப்பதை விரும்புவார்கள். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. ஸ்டீவன் சுமித், வார்னர் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலிய அணியில் இன்னும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் அவர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. களத்தில் ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது சூழ்நிலையை பொறுத்த வி‌ஷயமாகும். எதிரணி நம்மை நோக்கி ஆக்ரோ‌ஷமாக ஆடினால், நாங்களும் அதே பாணியில் பதிலடி கொடுப்போம். ஒரு அணியாக நாங்கள் ஒரு போதும் எந்த ஒரு சீண்டல் யுக்தியையும் ஆரம்பிக்க மாட்டோம். எங்களுக்கு என்று எப்போதும் ஒரு எல்லைக்கோடு உண்டு. ஆனால் எதிரணியை சேர்ந்த யாராவது அந்த எல்லையை தாண்டினால், சும்மா இருக்க மாட்டோம்’’– இந்திய கேப்டன் விராட் கோலி.


Next Story