கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி போராடி தோல்வி + "||" + Against Australia The first 20 over cricket: The Indian team failed to fight

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி போராடி தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி போராடி தோல்வி
பிரிஸ்பேனில் மழை பாதிப்புக்கு இடையே நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அட

பிரிஸ்பேன், 

பிரிஸ்பேனில் மழை பாதிப்புக்கு இடையே நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

20 ஓவர் கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா– ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேன் நகரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய பணித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிதானமாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் டார்சி ஷார்ட் 7 ரன்னில் கலீல் அகமதுவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து கிறிஸ் லின் வந்தார். முதல் 7 ஓவர்களில் அந்த அணி 42 ரன்களே எடுத்தது. அதன் பிறகே அதிரடி ரன்வேட்டையில் குதித்தனர். கிறிஸ் லின், கலீல் அகமதுவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை பறக்க விட்டார். கேப்டன் ஆரோன் பிஞ்ச் தனது பங்குக்கு 27 ரன்களும் (24 பந்து, 3 பவுண்டரி), கிறிஸ் லின் 37 ரன்களும் (20 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து குல்தீப் யாதவின் சுழலில் சிக்கினர்.

மேக்ஸ்வெல் ‘சரவெடி’

அதைத் தொடர்ந்து மேக்ஸ்வெல்லும், ஆல்–ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிசும் இணைந்து அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினர். குல்தீப் யாதவ் சுழலில் அவர்கள் தடுமாறினாலும் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யாவின் பந்து வீச்சை நொறுக்கித்தள்ளினர். பாண்ட்யாவின் ஒரு ஓவரில் மேக்ஸ்வெல் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 16.1 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. மழையால் ஆட்டம் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி 17 ஓவர் கொண்டதாக குறைக்கப்பட்டது. எஞ்சிய 5 பந்துகளை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல்லின் (46 ரன், 24 பந்து, 4 சிக்சர்) விக்கெட்டை இழந்து அந்த 5 பந்துகளில் 5 ரன் மட்டுமே எடுத்தது.

17 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது. ஸ்டோனிஸ் 33 ரன்களுடன் (19 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். பின்னர் டக்வொர்த்–லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 17 ஓவர்களில் 174 ரன்கள் குவிக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

கோலி ஏமாற்றம்

கடின இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் களம் புகுந்தனர். ரோகித் சர்மா 7 ரன்னில் ஏமாற்றினார். ஷிகர் தவான் நிலைத்து நின்று விளையாடி ஆஸ்திரேலிய பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். இது வேகமான ஆடுகளம் என்பதால் பேட்டில் சரியாக ‘கிளிக்’ ஆன பந்துகள் எல்லைக்கோட்டை நோக்கி தெறித்து ஓடின. ஆஸ்திரேலிய பவுலர்கள் அவ்வப்போது ‘பவுன்சர்’ பந்துகளை வீசிய போதிலும் அதை திறம்பட சமாளித்து தனது 9–வது அரைசதத்தை தவான் கடந்தார். மறுமுனையில் லோகேஷ் ராகுல் (13 ரன்), கேப்டன் விராட் கோலி (4 ரன்) இருவருக்கும் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ‘செக்’ வைத்து இந்தியாவுக்கு நெருக்கடியை உருவாக்கினார்.

அணியை தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்த ஷிகர் தவான், 12–வது ஓவரில் ஸ்டான்லேக் வீசிய ஷாட் பிட்ச் பந்தை சிக்சராக்கினார். மீண்டும் அதே போன்று பந்தை தூக்கியடித்த போது, மாற்று பீல்டர் நாதன் கவுல்டர்–நிலே கேட்ச்சை நழுவ விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை தவான் பயன்படுத்திக்கொள்வார் என்று பார்த்தால், 3–வது வீசப்பட்ட பவுன்சர் பந்தையும் அடிக்க முயற்சித்து எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆகிப்போனார். தவான் 76 ரன்களில் (42 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். அப்போது இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 105 ரன்களுடன் (11.4 ஓவர்) பரிதவித்தது.

தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்

இந்த சூழலில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட்டும், தினேஷ் கார்த்திக்கும் இணைந்து அணியை ஓரளவு மீட்டு நம்பிக்கையை கொண்டு வந்தனர். ஆண்ட்ரூ டையின் ஒரே ஓவரில் 25 ரன்கள் திரட்டினர். இதில் இருவரும் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டியதும் அடங்கும். இதனால் இறுதி கட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ரிஷாப் பான்ட் 20 ரன்னில் (16 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) தேவையில்லாமல் ‘ரிவர்ஸ் ஸ்கூப்’ ஷாட் அடிக்க முயற்சித்து கேட்ச் ஆனார். பான்ட்–கார்த்திக் கூட்டணி 5–வது விக்கெட்டுக்கு 23 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக்கும், ஆல்–ரவுண்டர் குருணல் பாண்ட்யாவும் களத்தில் இருந்தனர். இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஸ்டோனிஸ் வீசினார். சாதுர்யமாக திடீரென வேகத்தை குறைத்தும், ஷாட்பிட்சாக பந்து வீசியும் இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினார். முதல் பந்தில் 2 ரன் எடுத்த பாண்ட்யா அடுத்த பந்தில் ரன் எடுக்காமல் சொதப்பினார். பிறகு அவர் 3–வது பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால் 3 பந்தில் 11 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 4–வது பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் (30 ரன், 13 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) அதை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். அத்துடன் இந்தியாவின் நம்பிக்கையும் கரைந்து போனது. அடுத்து வந்த குல்தீப் யாதவ் கடைசி பந்தில் பவுண்டரி அடித்தது தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.

ஆஸ்திரேலியா வெற்றி

17 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 169 ரன்களே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 4 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இவ்விரு அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் போட்டி மெல்போர்னில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

‘மோசமான பீல்டிங்கால் தோல்வி’– தவான்

இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இது நெருக்கமான ஆட்டமாக அமைந்தது. இந்த போட்டி ரசிகர்களை பரவசப்படுத்தி இருக்கும். பேட்டிங்கில் நன்றாக தொடங்கினாலும், மிடில் ஓவர்களில் தடுமாறினோம். பிறகு ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக் விளையாடிய விதத்தை பார்த்து நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று நினைத்தேன். ஆனால் ரிஷாப் பான்ட் அவுட் ஆனதும், ஆட்டத்தின் போக்கு மறுபடியும் மாறியது. தொடக்க வரிசைக்கு வலுமிக்க ஒரு வீரர் தவான். 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர் இதுவரை சதம் கண்டதில்லை என்றாலும் அவர் இது போன்று ஆடுவது அணிக்கு அனுகூலமாகும். இந்த போட்டியை பொறுத்தவரை தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த ஆட்டத்தில் இதைவிட சிறப்பாக ஆட வேண்டும். மற்ற வி‌ஷயங்கள் குறித்து சிந்திப்பதற்கு அதிகமான நேரம் இல்லை.’ என்றார்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் நிருபர்களிடம் கூறுகையில், ‘பீல்டிங்கில் செய்த தவறுகளே தோல்விக்கு முக்கிய காரணமாகும். ஒரு சில கேட்ச்களை கோட்டை விட்டோம். இதே போல் ரன்–அவுட் வாய்ப்பையும் (மேக்ஸ்வெல்லுக்கு) நழுவ விட்டோம். ஆனால் இதுவெல்லாம் விளையாட்டில் சகஜம். தோல்வி அடைந்தாலும் இந்த ஆட்டத்தில் கிடைத்த நம்பிக்கையை அடுத்த ஆட்டத்திற்கு கொண்டு செல்வோம்’ என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கொடுத்த கேட்ச் வாய்ப்பை இந்திய கேப்டன் விராட் கோலியும், ஸ்டோனிஸ் வழங்கிய கேட்ச் வாய்ப்பை கலீல் அகமதுவும் வீணடித்தது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான துளிகள்

*ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் தூக்கியடித்த ஒரு ஷாட், அந்தரத்தில் படம் பிடித்துக் கொண்டிருந்த ‘ஸ்பைடர்’ கேமராவை பதம் பார்த்தது. இதனால் அந்த பந்து செல்லாது (டெட்பால்) என்று அறிவிக்கப்பட்டது.

*9–வது ஓவரில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா வீசிய ஒரு பந்தை இந்திய வீரர் லோகேஷ் ராகுல் எதிர்கொண்ட போது, ஸ்டம்பு மீது வைக்கப்பட்ட பெய்ல்ஸ் விழுந்தது. இதனால் அவுட் கேட்டு முறையிட்டனர். ரீப்ளேயில் பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பே ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரி, பெய்ல்ஸ் மீது கையுறையை வைத்து தட்டிவிட்டது தெரியவந்தது. இதனால் அது ‘நோ–பால்’ என்று அறிவிக்கப்பட்டு ‘பிரீ ஹிட்’ வழங்கப்பட்டது.

*லோகேஷ் ராகுல் 13 ரன்னில், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரியால் ‘ஸ்டம்பிங்’ செய்யப்பட்டார். ‘ரீப்ளே’யில் லோகேஷ் ராகுல், காலை சரியாக கோட்டில் வைப்பது போலத்தான் தெரிந்தது. ஆனாலும் அவருக்கு 3–வது நடுவர் அவுட் வழங்கியதால் ராகுல் அதிருப்தியுடன் வெளியேறினார்.

*சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யா 4 ஓவர்களில் 55 ரன்களை வாரி வழங்கினார். 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய பவுலரின் 3–வது மோசமான பந்துவீச்சு இதுவாகும்.

*சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் இந்திய வீரர் ஷிகர் தவான் இதுவரை 648 ரன்கள் (16 ஆட்டம்) சேர்த்துள்ளார். இதன் மூலம் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு இந்திய கேப்டன் விராட் கோலி 2016–ம் ஆண்டில் 641 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி–கோவை அணிகள் இன்று மோதல் சென்னையில் நடக்கிறது
4–வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட இரண்டு ஆட்டங்கள் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2. டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? காஞ்சி வீரன்சுடன் இன்று மோதல்
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்துடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இன்று காஞ்சி வீரன்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
3. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ‘ஓவர்துரோ’ மூலம் வந்த பவுண்டரியை வேண்டாம் என்று சொல்லவில்லை பென் ஸ்டோக்ஸ் மறுப்பு
இங்கிலாந்தில் கடந்த மாதம் நடந்த 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகள் மோதின.
4. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெற்றார் வேணுகோபால் ராவ்
இந்திய கிரிக்கெட் வீரர் வேணுகோபால் ராவ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
5. எம்.எஸ்.டோனி கிரிக்கெட்டில் இருந்து நிரந்தர ஓய்வு இல்லை - 2 மாதமே ஓய்வு தகவல்
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் எம்.எஸ்.டோனி கலந்து கொள்ளவில்லை, இப்போது ஓய்வும் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.