ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் கேரள அணி அபார வெற்றி


ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் கேரள அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 22 Nov 2018 9:30 PM GMT (Updated: 22 Nov 2018 8:39 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்கால்–கேரளா (பி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கொல்கத்தாவில் நடந்தது.

கொல்கத்தா, 

ரஞ்சி கிரிக்கெட் போட்டி தொடரில் பெங்கால்–கேரளா (பி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கொல்கத்தாவில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் பெங்கால் அணி 147 ரன்னும், கேரளா அணி 291 ரன்னும் எடுத்தன. 144 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய பெங்கால் அணி 2–வது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 5 ரன் எடுத்து இருந்தது. 3–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி 2–வது இன்னிங்சில் 184 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் மனோஜ் திவாரி 62 ரன்கள் எடுத்தார். கேரளா அணி தரப்பில் சந்தீப் வாரியர் 5 விக்கெட்டும், பாசில் தம்பி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய கேரளா அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஞ்சி போட்டியில் கேரளா அணி, பெங்காலை வீழ்த்தி இருப்பது இதுவே முதல்முறையாகும். ஜோர்ஹத்தில் நடந்த மிஜோரம் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மணிப்பூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுக அணியாக களம் கண்ட மணிப்பூர் அணி ரஞ்சி போட்டியில் பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும். தமிழ்நாடு–ஆந்திரா (பி பிரிவு) அணிகள் இடையேயான லீக் ஆட்டம் ஓங்கோலில் நடந்து வருகிறது. இதில் ஆந்திரா அணி முதல் இன்னிங்சில் 216 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2–வது நாள் ஆட்டம் முடிவில் 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்து இருந்தது. 3–வது நாளான நேற்று மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. இன்று 4–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story