இந்தியா–ஆஸ்திரேலியா மோதிய 2–வது 20 ஓவர் போட்டி மழையால் பாதியில் ரத்து


இந்தியா–ஆஸ்திரேலியா மோதிய 2–வது 20 ஓவர் போட்டி மழையால் பாதியில் ரத்து
x
தினத்தந்தி 23 Nov 2018 10:00 PM GMT (Updated: 23 Nov 2018 8:44 PM GMT)

இந்தியா – ஆஸ்திரேலியா மோதிய 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

மெல்போர்ன், 

இந்தியா – ஆஸ்திரேலியா மோதிய 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

2–வது 20 ஓவர் கிரிக்கெட்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான மெல்போர்னில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டான்லேக் கணுக்கால் காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக நாதன் கவுல்டர்–நிலே சேர்க்கப்பட்டார். இதில் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு 2–வது பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. புவனேஷ்வர்குமார் ஆப்–சைடுக்கு வெளியே வீசிய பந்தை கேப்டன் ஆரோன் பிஞ்ச் (0) அடிக்க முயற்சித்து விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டிடம் கேட்ச் ஆனார்.

தொடர்ந்து இந்திய பவுலர்கள் கொடுத்த குடைச்சலில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திண்டாடினர். டார்சி ஷார்ட் (14 ரன்), கிறிஸ் லின் (13 ரன்), மார்கஸ் ஸ்டோனிஸ் (4 ரன்) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. முந்தைய ஆட்டத்தில் சிக்சர் மழை பொழிந்த மேக்ஸ்வெல்லை (19 ரன், 22 பந்து, ஒரு பவுண்டரி), குருணல் பாண்ட்யா கிளீன் போல்டாக்கி பழிதீர்த்துக் கொண்டார். விக்கெட் சரிவால் ரன்வேகம் மந்தமானது. கடைசி கட்டத்தில் நாதன் கவுல்டர் நிலே (18 ரன், ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), பென் மெக்டெர்மோட் (32 ரன், 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) கொஞ்சம் அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை கவுரவமான நிலைக்கு நகர்த்தினர்.

மழையால் ரத்து

19 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் ஒரு மணி நேரம் பாதிப்புக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அத்துடன் ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடித்துக் கொள்ளப்பட்டு, டக்வொர்த்–லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 19 ஓவர்களில் 137 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இரு அணி வீரர்களும் களம் இறங்க தயாராக இருந்த நிலையில் மீண்டும் மழை கொட்டியது. பிறகு 11 ஓவர்களில் 90 ரன், 5 ஓவர்களில் 46 ரன் என்றெல்லாம் இலக்கு நிர்ணயிக்கும் வகையில் மழை கண்ணாமூச்சி காட்டியது. விட்டு விட்டு மழை பெய்ததால் இந்த ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் வீரர்கள் மட்டுமின்றி குழுமியிருந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டி ஒன்றில் முடிவு கிடைக்காமல் போனது இதுவே முதல் முறையாகும். இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார், கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளும், பும்ரா, குல்தீப் யாதவ், குருணல் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்த ஆட்டம்

இதன் மூலம் தொடர்ச்சியாக ஏழு 20 ஓவர் தொடர்களை வென்று இருந்த இந்திய அணியின் வீறுநடை முடிவுக்கு வந்தது. ஏனெனில் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் தொடர் சமனில் தான் முடியும்.

முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததால் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நாளை நடக்கிறது.


Next Story