பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்டு இந்தியா வெளியேறியது


பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்டு இந்தியா வெளியேறியது
x
தினத்தந்தி 23 Nov 2018 10:45 PM GMT (Updated: 23 Nov 2018 9:03 PM GMT)

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது.

ஆன்டிகுவா, 

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது.

அரைஇறுதி ஆட்டம்

6–வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை ஆன்டிகுவாவில் நடந்த 2–வது அரைஇறுதிப்போட்டியில் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் போட்டியில் அதிக ரன் குவித்த இந்தியரான சீனியர் வீராங்கனை மிதாலி ராஜ் ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களாக தானியா பாட்டியா, மந்தனா ஆகியோர் களம் இறங்கினார்கள். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) இந்திய அணி 43 ரன்கள் சேர்த்தது. மந்தனா 23 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தானியா பாட்டியா 11 ரன்னில் அவுட் ஆனார். ஒரு கட்டத்தில் (13.4 ஓவரில்) இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்து இருந்ததை பார்க்கையில் 150 ரன்களை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விக்கெட்டுகள் சரிவு

ஆனால் அதன் பின்னர் விக்கெட்டுகள் மள, மளவென்று சரிந்தன. 19.3 ஓவரில் இந்திய அணி 112 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. இதில் 3 பேர் ‘ரன்–அவுட்’ ஆனதும் அடங்கும். இந்த போட்டி தொடரில் இந்திய அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். கடைசி 8 விக்கெட்டுகளை 24 ரன்னுக்கு இழந்தது. ரோட்ரிக்ஸ் 26 ரன்னும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 16 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டினார்கள். இங்கிலாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹீதர் நைட் 3 விக்கெட்டும், கிறிஸ்டி கோர்டான், சோபி எக்லிஸ்டோன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டாமி பிமோன்ட் 1 ரன்னிலும், டானிலி வியாத் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

இங்கிலாந்து அணி அபார வெற்றி

3–வது விக்கெட்டுக்கு நாதலி சிவெர், அமை ஜோன்சுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அமை ஜோன்ஸ் 53 ரன்னும் (47 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), நாதலி சிவெர் 52 ரன்னும் (38 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் தீப்தி ‌ஷர்மா, ராதா யாதவ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இங்கிலாந்து வீராங்கனை அமை ஜோன்ஸ் ஆட்டநாயகி விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 2009–ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி 4–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காமல் கம்பீரமாக முன்னேறிய இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இறுதிப்போட்டியை எட்டியதில்லை என்ற சோகம் தொடருகிறது.

ஆஸ்திரேலியா அசத்தல்

முன்னதாக நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை சந்தித்தது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அலிசா ஹீலி 46 ரன்னும், கேப்டன் மெக் லானிங் 31 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.3 ஓவரில் 71 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 5–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

--–

இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா–இங்கிலாந்து நாளை மோதல்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு ஆன்டிகுவாவில் அரங்கேறுகிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் வலுவான நிலையில் இருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை 20 ஓவர் போட்டியில் 31 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இங்கிலாந்து அணி 17 முறையும், ஆஸ்திரேலிய அணி 13 தடவையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இறுதிப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

மிதாலி ராஜ் நீக்கம் ஏன்?–கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளக்கம்

இந்த போட்டி தொடரில் அடுத்தடுத்து 2 அரைசதம் அடித்த இந்திய சீனியர் வீராங்கனை மிதாலி ராஜ் காயம் காரணமாக கடைசி லீக்கில் ஆடவில்லை. ஆனால் காயத்தில் இருந்து குணம் அடைந்த போதிலும் அரைஇறுதிப்போட்டியில் அவர் களம் இறக்கப்படாதது குறித்து டெலிவி‌ஷன் வர்ணனையாளர்களான முன்னாள் வீரர்கள் நாசர் ஹூசைன், சஞ்சய் மஞ்ச்ரேகர் ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள். இது குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் மிக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றோம். அதனால் தான் அந்த வெற்றி கூட்டணியை மாற்றாமல் களம் காண முடிவு செய்தோம். எனவே மிதாலிராஜ்க்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது. எந்த முடிவு எடுத்தாலும் அணியின் நலனுக்காகவே நாங்கள் எடுக்கிறோம். சில சமயங்களில் நாங்கள் எடுக்கும் முடிவு சரியாக அமைகிறது. சில நேரங்களில் பலன் கிடைப்பதில்லை. அதனால் இதில் வருத்தப்பட எதுவும் இல்லை. இந்த போட்டி தொடர் முழுவதும் எங்கள் வீராங்கனைகள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமை அடைகிறேன். நாங்கள் எடுத்த ஸ்கோர் போதுமானது கிடையாது. 140 முதல் 150 ரன்கள் எடுத்து இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்க முடியும். எங்கள் அணியில் இளம் வீராங்கனைகள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் இந்த ஆட்டத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள். சில நேரங்களில் ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி ஆட்ட அணுகுமுறையை மாற்ற வேண்டியது அவசியமானதாகும். இங்கிலாந்து அணியினர் ஆடுகளத்தை நன்கு கணித்து சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த ஆடுகளத்தில் சேசிங் செய்வது எளிதானது கிடையாது. சிறிய ஸ்கோர் என்றாலும் நாங்கள் 18–வது ஓவர் வரை ஆட்டத்தை நீடிக்க செய்தோம். நெருக்கடியான தருணத்தில் நம்பிக்கையை இழக்காமல் மன உறுதியுடன் செயல்படுவது எப்படி? என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story