டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார், ஆண்டர்சன்


டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தை இழந்தார், ஆண்டர்சன்
x
தினத்தந்தி 28 Nov 2018 10:00 PM GMT (Updated: 28 Nov 2018 7:33 PM GMT)

டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இங்கிலாந்தின் ஆண்டர்சன் முதலிடத்தை இழந்தார்.

துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 9 இடங்களில் மாற்றமில்லை. இந்திய கேப்டன் விராட் கோலி 935 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் தொடருகிறார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 2-வது இடத்திலும் (910 புள்ளி), நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் 3-வது இடத்திலும் (876 புள்ளி), இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 4-வது இடத்திலும் (807 புள்ளி), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5-வது இடத்திலும் (803 புள்ளி), இந்தியாவின் புஜாரா 6-வது இடத்திலும் (765 புள்ளி) உள்ளனர்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தை பறிகொடுத்துள்ளார். இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. போட்டியை தவற விட்டதன் மூலம் அவரது ஒட்டுமொத்த புள்ளிகளில் இருந்து ஒரு சதவீத புள்ளி குறைந்தது. இதன்படி 9 புள்ளிகளை இழந்துள்ள ஆண்டர்சன் 2-வது இடத்துக்கு (874 புள்ளி) இறங்கினார். தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா (882 புள்ளி) மறுபடியும் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார். 3, 4, 5-வது இடங்களில் முறையே பாகிஸ்தானின் முகமது அப்பாஸ் (829 புள்ளி), தென்ஆப்பிரிக்காவின் வெரோன் பிலாண்டர் (826 புள்ளி), இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (812 புள்ளி) ஆகியோர் இருக்கிறார்கள். இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் ஏற்றம் கண்டு 7-வது இடம் வகிக்கிறார்.


Next Story