கிரிக்கெட்

பயிற்சி கிரிக்கெட்: இந்திய அணி 358 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ விராட்கோலி உள்பட 5 வீரர்கள் அரைசதம் அடித்தனர் + "||" + India scored 358 runs in the all-out

பயிற்சி கிரிக்கெட்: இந்திய அணி 358 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ விராட்கோலி உள்பட 5 வீரர்கள் அரைசதம் அடித்தனர்

பயிற்சி கிரிக்கெட்: இந்திய அணி 358 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ விராட்கோலி உள்பட 5 வீரர்கள் அரைசதம் அடித்தனர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது.
சிட்னி, 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. கேப்டன் விராட்கோலி உள்பட 5 வீரர்கள் அரைசதம் அடித்தனர்.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவனுடன், இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.

இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய லெவன் அணிகள் இடையிலான பயிற்சி போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் தொடங்க இருந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல் களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் 3 ரன்னில் ஆட்டம் இழந்து மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து புஜாரா, பிரித்வி ஷாவுடன் இணைந்தார். ‘இளம் புயல்’ பிரித்வி ஷா அதிரடியாக ஆடினார். புஜாரா நிதான போக்கை கடைப்பிடித்தார். அணியின் ஸ்கோர் 96 ரன்களை எட்டிய போது தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா (66 ரன், 69 பந்து, 11 பவுண்டரி) டேனியல் பாலின்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

இதைத்தொடர்ந்து கேப்டன் விராட்கோலி அடியெடுத்து வைத்தார். தன் பங்குக்கு புஜாரா 54 ரன்னும் (89 பந்து, 6 பவுண்டரி), விராட்கோலி 64 ரன்னும் (87 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் ஹனுமா விஹாரி, துணை கேப்டன் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார். ஹனுமா விஹாரி 53 ரன்கள் எடுத்த நிலையில் டார்சி ஷார்ட் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 123 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 56 ரன்கள் சேர்த்த ரஹானே, பின்வரிசை பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பாதியில் வெளியேறினார்.

அதன் பின்னர் வந்த ரோகித் சர்மா 40 ரன்னிலும் (55 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), அஸ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும் விரைவில் ஆட்டம் இழந்தனர். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 92 ஓவர்களில் 358 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 11 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். கடைசி 11 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி தரப்பில் ஆரோன் ஹார்டி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்தது. டார்சி ஷார்ட் 10 ரன்னுடனும், மேக்ஸ் பிரியான்ட் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.