வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வங்காளதேச அணி 508 ரன்கள் குவிப்பு


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வங்காளதேச அணி 508 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2018 10:46 PM GMT (Updated: 1 Dec 2018 10:46 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், வங்காளதேச அணி 508 ரன்கள் குவித்துள்ளது.

டாக்கா,

வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் தொடக்க நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி தேனீர் இடைவேளைக்கு பிறகு முதல் இன்னிங்சில் 154 ஓவர்களில் 508 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அந்த அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். தனது 3-வது சதத்தை நிறைவு செய்த மக்முதுல்லா 136 ரன்களும் (242 பந்து, 10 பவுண்டரி), கேப்டன் ஷகிப் அல்-ஹசன் 80 ரன்களும், விக்கெட் கீப்பர் லிட்டான் தாஸ் 54 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, வங்காளதேசத்தின் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திண்டாடியது. 29 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதன் பிறகு ஹெட்மயரும் (32 ரன்), விக்கெட் கீப்பர் டவ்ரிச்சும் (17 ரன்) இணைந்து அணியை சரிவில் இருந்து சற்று மீட்டனர். 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகளும், ஷகிப் அல்-ஹசன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.


Next Story