விராட்கோலியை வீழ்த்த எங்களிடம் திட்டம் இருக்கிறது - ஆஸ்திரேலிய அணியின் துணைகேப்டன் ஹேசில்வுட் பேட்டி


விராட்கோலியை வீழ்த்த எங்களிடம் திட்டம் இருக்கிறது - ஆஸ்திரேலிய அணியின் துணைகேப்டன் ஹேசில்வுட் பேட்டி
x
தினத்தந்தி 3 Dec 2018 11:00 PM GMT (Updated: 3 Dec 2018 10:42 PM GMT)

விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்த எங்களிடம் திட்டம் உள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ஹேசில்வுட் கூறினார்.

அடிலெய்டு,

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஹேசில்வுட் அடிலெய்டில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய அணியின் பேட்டிங் வரிசை உலகின் சிறந்த பேட்டிங் வரிசையாக உள்ளதாக நான் பார்க்கிறேன். விராட்கோலி மற்ற அணிகளுக்கு எதிராக எப்படி ரன்கள் திரட்டுகிறார் என்பதை நாங்கள் பார்த்து இருக்கிறோம். எனவே அவரது ஆட்டத்தை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். கடைசியாக ஆஸ்திரேலியாவில் எங்களுடன் ஆடிய பிறகு இந்திய அணி அதிகம் உள்நாட்டில் தான் விளையாடி இருக்கிறது. இந்திய அணி இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அங்கெல்லாம் விராட்கோலி தான் ரன்கள் குவித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் குறிப்பிடத்தக்க ரன் சேர்க்கவில்லை.

விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்த எங்களிடம் சில திட்டங்கள் இருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு அந்த வாய்ப்புகள் குறித்து கலந்து பேசி களத்தில் அமல்படுத்துவோம். விராட்கோலிக்கு எதிராக வசைபாடுதல் (சிலெட்ஜிங்) திட்டம் எதுவும் இல்லை. அப்படி செய்தால் அவர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பது எங்களுக்கு தெரியும். எதிரணியினருக்கு எரிச்சல் ஏற்படுத்துவது என்பது தனிப்பட்ட வீரர்களை பொருத்த விஷயமாகும். என்னை பொறுத்தமட்டில் நான் பந்து வீசுகையில் அமைதியை கடைப்பிடிப்பவன்.

முதல் டெஸ்ட் போட்டியில் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது அவசியமானதாகும். முதல் இன்னிங்ஸ் எப்பொழுதும் முக்கியமானதாகும். தொடக்கத்தில் எதிரணியை ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு உயர்ந்து விட்டால் அதனை தொடர முடியும். எங்கள் அணியில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் இல்லாவிட்டாலும், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமவிகிதத்தில் இருப்பதாகவே கருதுகிறேன். இந்திய அணி நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக விளங்குகிறது. அதேநேரத்தில் நாங்கள் உள்ளூரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். எனவே இந்த ஆட்டத்தில் போட்டி நெருக்கமானதாகவே இருக்கும்.

எங்களது பந்து வீச்சு மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கடந்த ஆஷஸ் தொடரில் எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. அதனை உலகின் நம்பர் ஒன் அணியான இந்தியாவுக்கு எதிராகவும் பிரதிபலிப்போம். அடிலெய்டு மற்றும் பெர்த் ஆடுகளங்களில் ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சு எடுபடாது. சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் அதிக ஓவர்கள் பந்து வீசக்கூடியவர். அவரது கட்டுக்கோப்பான பந்து வீச்சு, எங்களுக்கு (வேகப்பந்து வீச்சாளர்களுக்கு) முக்கியமானதாகும் என்று அவர் கூறினார்.


Next Story