தொடர்ந்து பயமுறுத்தும் ஆஸ்திரேலிய வீரர்கள்; சிம்ம சொப்பனமாக விளங்குவாரா கோலி?


தொடர்ந்து பயமுறுத்தும் ஆஸ்திரேலிய வீரர்கள்; சிம்ம சொப்பனமாக விளங்குவாரா கோலி?
x
தினத்தந்தி 4 Dec 2018 11:35 AM GMT (Updated: 2018-12-04T17:05:12+05:30)

விராட் கோலிக்கு எதிராக நாங்கள் ரகசிய திட்டங்களை வைத்திருக்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் அடிலெய்டில் தொடங்குகிறது.

இந்த போட்டிக்காக இரு நாட்டு வீரர்களும் சிறந்த முறையில் பயிற்சி மேற்கொண்டு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வெல்ல இந்திய அணிக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் களத்தில் இந்திய அணியினரை சந்திக்கும் முன்பே வீரவசனங்களை பேச தொடங்கி உள்ளனர்.

இதில், கேப்டன் விராட் கோலியை இலக்காக கொண்டே அவர்களின் பேச்சு அமைந்துள்ளது.  இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறும்பொழுது, இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் ஆட்டத்தை பார்த்து அசராமல் அவருக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் இன்னும் அச்சத்தை ஏற்படுத்தலாம்.

கோலி ரன் வேட்டையில் ஈடுபடுவார் என நினைக்க தேவையில்லை. அவர் ரன்களை குவிக்க முயல்வார். ஆனால் அவரை கண்டு ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பயப்பட தேவையில்லை என கூறினார்.

இதேபோன்று ஆஸ்திரேலிய இடக்கை ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை.

அவர், மூன்று அதிவேக பந்து வீச்சாளர்களை (ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ்) சந்திக்க வேண்டியது இருக்கும். போதுமான நெருக்கடி கொடுத்தால் நிச்சயம் தவறிழைத்து ஆட்டம் இழந்து விடுவார். இதை செய்வதற்குரிய பவுலர்கள் எங்களிடம் இருக்கிறார்கள் என்று கூறினார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான ஹேசில்வுட் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்த எங்களிடம் சில திட்டங்கள் இருக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பு அந்த வாய்ப்புகள் குறித்து கலந்து பேசி களத்தில் அமல்படுத்துவோம்.

விராட்கோலிக்கு எதிராக வசைபாடுதல் (சிலெட்ஜிங்) திட்டம் எதுவும் இல்லை. அப்படி செய்தால் அவர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறினார்.

இந்நிலையில், ஆல் ரவுண்டர் மற்றும் மற்றொரு துணை கேப்டனான மிட்செல் மார்ஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, விராட் ஒரு சிறந்த வீரர் என எங்கள் அனைவருக்கும் தெரியும்.  அவருக்கென நாங்கள் எல்லோரும் திட்டங்களை வைத்திருக்கிறோம்.  அவரை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது.

ஆனால் இந்திய அணியில் உள்ள மற்ற பேட்ஸ்மேன்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவில்லை என யாரேனும் நினைக்கிறார்கள் என்றால் அவர்கள் முட்டாள்கள் என்று கூறினார்.

எங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் பெரிய அளவிலான திட்டங்களை வைத்துள்ளனர்.  போட்டி தொடங்கியதும் சரியாக அதனை செயல்படுத்தி வீழ்த்தும் வகையில் அவர்கள் செயல்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story