அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் கவுதம் கம்பீர் ஓய்வு; அரசியலில் இன்னிங்சை தொடங்குகிறார்


அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் கவுதம் கம்பீர் ஓய்வு; அரசியலில்  இன்னிங்சை தொடங்குகிறார்
x
தினத்தந்தி 5 Dec 2018 11:33 AM GMT (Updated: 5 Dec 2018 11:33 AM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

2003-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக  அறிமுகமானவர் கவுதம் கம்பீர்.  2004-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

தொடக்கத்தில் கம்பீரின் ஆட்டம் மெச்சத்தகுந்த வகையில் இல்லாததால் அணியில் அவருக்கான இடம் நிலையற்றதாக இருந்தது. 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் கம்பீருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்படவில்லை. உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேற, அடுத்து நடைபெற்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் ஒருவராக அணியில் சேர்க்கப்பட்டார் கம்பீர். இதில் சிறப்பாக விளையாடி அணியில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார் கம்பீர். 

இதன் முத்தாய்ப்பாக 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக கம்பீர் திகழ்ந்தார். 2009-ம் ஆண்டு நேப்பியரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் , சுமார் 10 மணி நேரம் 43 நிமிடங்கள் களத்தில் நின்று 137 ரன்கள் எடுத்த கம்பீர், ஒற்றை ஆளாக நின்று இந்திய அணியின் தோல்வியை தவிர்த்தார். 

எதிரணி வீரர்களுடன் களத்தில் அவ்வப்போது மோதுவது என கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. 2011-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் தனக்கான இடத்தை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கினார் கம்பீர். கடைசியாக 2016-ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். தற்போது டெல்லி அணிக்காக உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார்.

இந்திய அணிக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 20 ஓவர்  போட்டிகளில் 37    போட்டிகள் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 22 அரைசதம் 9 சதங்களுடன் 4154 ரன்களும், ஒருநாள் போட்டியில் 34 அரைசதம், 11 சதங்களுடன் 5238 ரன்களும், 20 ஓவர் போட்டியில்  7 அரைசதங்களுடன் 932 ரன்களும் சேர்த்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள கம்பீரை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிட வைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. 

கம்பீரின் செயல்பாடுகளும், கருத்துக்களும் பாஜகவுடன் ஒத்துப்போவதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் பேசப்படும் நிலையில் இந்த தகவலை அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியாது.  

கிரிக்கெட்டில் தனது இன்னிங்சை முடித்துக் கொள்வதாக கம்பீர் அறிவித்திருந்தாலும் அரசியலில் விரைவில் தனது இன்னிங்சை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story